கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் உட்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக திகழ்வதால், சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, உள்ளூர் போட்டிகள் கூட நடக்கவில்லை. 

கொரோனாவிலிருந்து உலகம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், முழு பாதுகாப்புடன், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்துக்கு சென்று ஜூன் 4 முதல் 29 வரையிலான காலக்கட்டத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போன அந்த போட்டிகளை ஜூலை 8 முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இங்கிலாந்து சென்றதும், குறைந்தது 2 வாரமாவது தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், ஒரு மாதத்திற்கு முன்பாகவே இங்கிலாந்து செல்கின்றனர். 

முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனிலும், அடுத்த 2 போட்டிகளும் மான்செஸ்டரிலும் நடக்கவுள்ளன. இந்த போட்டிகளில் ஆடுவதற்கான 14 வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 11 ரிசர்வ் வீரர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு செல்வதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் அழைத்தபோது, டேரன் பிராவோ, ஷிம்ரான் ஹெட்மயர் மற்றும் கீமோ பால் ஆகிய மூவரும், இங்கிலாந்துக்கு செல்ல மறுத்துவிட்டனர். இவர்களின் முடிவு, இவர்களது கிரிக்கெட் எதிர்காலத்தை பாதிக்காது என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

14 வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், போனெர், க்ரைக் பிராத்வெயிட், ஷமார் ப்ரூக்ஸ், ஜான் கேம்ப்பெல், ரோஸ்டான் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷேன் டௌரிச், செமார் ஹோல்டர், ஷேய் ஹோப், அல்ஸாரி ஜோசஃப், ரேய்மன் ரெய்ஃபெர், கீமார் ரோச்.

ரிசர்வ் வீரர்கள்:

சுனில் ஆம்ப்ரிஸ், ஜோஷுவா சில்வா, ஷெனான் கேப்ரியல், கியோன் ஹார்டிங், கைல் மேயர்ஸ், ப்ரெஸ்டான், மெக்ஸ்வீன், மைண்ட்லி, ஷேன் மோஸ்லி, ஆண்டர்சன் ஃபிலிப், ஒஷேன் தாமஸ், ஜோமெல் வாரிகன்.