இனி ராம் லல்லா இல்லை... அயோத்தி ராமருக்கு சூட்டப்பட்ட புதிய பெயர் 'பாலக் ராம்'!
ராமர் சிலைக்கு 'பாலக் ராம்' என்று பெயர் சூட்டப்பட்டதற்குக் காரணம் அவர் ஐந்து வயது குழந்தையைப் போல இருப்பதுதான் என்று பூசகர்களில் ஒருவரான அருண் தீட்சித் சொல்கிறார்.
அயோத்தியில் ராமர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்ததை அடுத்து அங்குள்ள ராம் லல்லாவுக்குப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 'பாலக் ராம்' (பால ராமர்) என்று புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.
"ஜனவரி 22 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ராமர் சிலைக்கு 'பாலக் ராம்' (பால ராமர்) என்று பெயரிடப்பட்டுள்ளது. ராமர் சிலைக்கு 'பாலக் ராம்' என்று பெயர் சூட்டப்பட்டதற்குக் காரணம் அவர் ஐந்து வயது குழந்தையைப் போல இருப்பதுதான்" என்று கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கெடுத்த பூசகர்களில் ஒருவரான அருண் தீட்சித் கூறியுள்ளார்.
ஜனவரி 18 அன்று சிலையை முறையாகப் பார்த்த அனுபவத்தைக் கூறும் அவர், "சிலையை முதன்முதலாகப் பார்த்தபோது, நான் சிலிர்த்துப் போனேன். என் முகத்தில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அப்போது நான் அனுபவித்த உணர்வை என்னால் விளக்க முடியாது" என்று சொல்கிறார்.
"இதுவரை நான் செய்த அனைத்து கும்பாபிஷேகங்களின் சிகரமாக இது இருந்தது. மிகவும் தெய்வீகமானதாக இருந்தது" என்று கூறுகிறார். வாரணாசியைச் சேர்ந்த அருண் தீட்சித் ஏறக்குறைய 50-60 கும்பாபிஷேகங்களை நடத்தி வைத்த அனுபவம் உள்ளவர்.
ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சீதனத்தை அயோத்தி ராமர் பாதத்தில் வைத்து வழிபட்ட பிரதமர் மோடி
மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜால் 51 அங்குல சிலை 3 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. மைசூருவின் எச்டி கோட் தாலுகாவில் இருக்கும் ஜெயபுரா ஹோப்ளியில் உள்ள குஜ்ஜேகவுடனாபுரா பகுதியில் இருந்து சிலைக்கான கிரானைட் கல் தோண்டப்பட்டது. மென்மையான மேற்பரப்பு அமைப்பு காரணமாக சோப்ஸ்டோன் என்று அழைக்கப்படும் இந்தக் கல் அனைத்து விதமான சிலைகளைச் செதுக்கவும் ஏற்றது.
"என்னையும் எனது குடும்பத்தையும் கடவுள் ராமர் எல்லா நேரத்திலும் காப்பாற்றி வருகிறார் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். மேலும் அவர்தான் என்னை இந்த மங்களகரமான பணிக்குத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று உறுதியாக நம்புகிறேன்" என்கிறார் சிலையைச் செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ்.
"நான் பல இரவுகளாக தூக்கமில்லாமல் சிலையைத் துல்லியமாகச் செதுக்குவதிலேயே கவனமாக இருந்தேன். நான் இந்த பூமியிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இன்று என் வாழ்க்கையின் சிறந்த நாள். என் தந்தையிடம் சிற்பம் செய்யும் கலையைக் கற்றுக்கொண்டேன். இன்று என் சிலையை அயோத்தி கோயிலில் பார்த்ததில் ரொம்ப பெருமையாக இருக்கிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
250 கோடி ஆண்டு பழமையான கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட அயோத்தி ராம் லல்லா சிலை!