DMK MLA Office: புதுச்சேரி வில்லியனூரில், திமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பட்டறை நடத்தி வந்த வேதகரி என்ற முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பட்டரை உரிமையாளர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவரும், வில்லியனூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான சிவா அலுவலகம் வில்லியனூர்- கொம்பாக்கம் சாலையில் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வேதகரி(60) என்ற முதியவர் கத்தி உள்ளிட்ட இரும்பு பொருட்கள் தயார் செய்யும் பட்டறையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல கடைக்கு வந்த ஊழியர்கள் வேதகிரி தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வேதகிரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழில் போட்டி காரணமாக வேதகிரி கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரவுடிகள் யாரேனும் கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
