தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைப்பு
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால் புதுவையில் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற முடிவை மாற்றி வருகின்ற 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுத்தேர்வுகள் நிறைவு பெற்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால், கோடை வெயிலின் தாக்கம் துளியும் குறைந்ததாக தெரியவில்லை.
நேற்றைய தினம் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இந்நிலையில் பெற்றோர், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்கு பதிலாக ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஆத்தா மகமாயி” சிஎஸ்கே வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை கடவுளிடம் போராடிய ரசிகர்
இதே போன்று புதுச்சேரியிலும் வெயிலின் தாக்கத்தை காரணம் காட்டி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இன்று சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம், வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார்.
மேலும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற முடிவு மாற்றப்பட்டு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.