CSK Fan Prays for Victory : “ஆத்தா மகமாயி” சிஎஸ்கே வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை கடவுளிடம் போராடிய ரசிகர்
சென்னை, குஜராத் அணிகள் இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்த போது ரசிகர் ஒருவர் டிவியை பார்த்துக் கொண்டு சாமி கும்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவு பெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை, குஜராத் அணிகள் மோதின. ஏற்கனவே ஞாயிற்றுக் கிழமை போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை காரணமாக 1 நாள் தாமதமாக போட்டி நேற்று நடத்தப்பட்டது. போட்டியின் போது மழை குறுக்கிடலாம் என்ற நிலையால் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த குஜராத் பேட்ஸ்மேன்கள் 214 ரன்களை குவித்தனர். 20 ஓவர்களில் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியுடன் சேர்த்து மழையும் களம் கண்டது. இதனால் நீண்ட நேரம் போட்டி தடைபட்டது. ஒரு வழியாக மழை தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வந்தனர்.
மழை காரணமாக போட்டி 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 15 ஓவர்களில் 171 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிஎஸ்கே தனது இலக்கை துரத்தி வேகமாக சென்றுகொண்டிருந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சிஎஸ்கேவின் வேகம் குறையவில்லை. இறுதியாக 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போது ஜடேஜா முதல் பந்தை சிக்சர் பறக்கவிட்டார். அது வரையில் சென்னை ரசிகர்கள் மட்டும் பதற்றத்தில் இருந்த நிலை மாறி கடைசி பந்தில் இரு அணி ரசிகர்களும் பதற்றத்தின் உச்சத்திற்கு சென்றனர்.
கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜடேஜா அந்த பந்தை லாவகமாக பவுண்டரிக்கு தட்டிவிட்டு சென்னை அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்ற உதவி செய்தார். இந்நிலையில், கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற போது ரசிகர் ஒருவர் டிவியில்போட்டியை பார்த்தபடி சாமி கும்பிடுவதும், சென்னை அணி வெற்றி பெற்றதும் உணர்ச்சி பெருக்கில் சத்தம் போடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.