புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பாரதிய ஜனதாவின் 3 நியமன MLAகள் மற்றும் அமைச்சர் சாய் சரவணகுமார் திடீர் ராஜினாமா.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதன் அடிப்படையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் பதவி, இருவருக்கு அமைச்சர் பதவி, துணைசபாநாயகர் உள்ளிட்ட பதவிகள் ஒதுக்கப்பட்டன. இதே போன்று பாரதிய ஜனதா கட்சிக்கு 2 அமைச்சர்கள் உள்பட 3 நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தற்போது பாரதிய ஜனதா நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசாக்பாபு உள்ளிட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் செல்வம் முன்னிலையில் சட்டப்பேரவைச் செயலாளர் தயாளனிடம் வழங்கினர்.
ராஜினாமா செய்த நியமன உறுப்பினர்கக்கு பதிலாக ராஜசேகரன், முன்னாள் சட்டமன்ற உறு்பபினர் தீப்பாய்ந்தான், முதலியார்பேட்டை செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சரும், ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சாய் ஜெ சரணகுமாரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கிய நிலையில், பிரதமர் மோடியின் உத்தரவைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சரவணகுமாரின் அமைச்சர் பதவி காமராஜ் நகர் தொகுதி பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாருக்கு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
