புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் புகைப்படத்துடன் வெளியான போஸ்டை பார்த்து ஒட்டுமொத்த புதுவையும் அதிர்ந்தது. என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இருந்து வருகிறார். புதுவையில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
புதுவையில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம்
புதுவையில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமம் அடைந்தனர். அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு புதுவையில் வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதுவே மக்கள் துன்பத்துக்கு காரணம் என குற்றம்சாட்டி வருகிறது.
ரங்கசாமி அரசை விளாசிய நாராயணசாமி
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவரும், புதுச்சேரி முன்னாள் முதல்வருமான நாராயணசாமி நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்து, ''புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு ஊழலில் திளைத்து வருகிறது. புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் எந்தவித நுழைவுத் தேர்வும் இல்லாமல் செவிலியர்களை நியமிக்க ஒருவருக்கு ரூ.20 லட்சம் வரை பேரம் பேசப்படுகிறது'' என்று பரபரப்பு குற்றம்சாட்டினார்.
நாராயணசாமி பிரஸ்மீட் போஸ்ட்
நேற்று நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்த நிலையில், இந்த செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக நேற்று முன் தினம் ஒரு போஸ்ட் வெளியிடப்பட்டு இருந்தது. அதாவது ''முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் நாளை 23-10-2025 மாலை 05.00 மணியளவில் (அதாவது நேற்று) எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்'' என்ற ஒரு போஸ்டர் சமூக வலைத்தளத்தில் பரவியது.
சர்ச்சைக்குரிய போஸ்டர்
நாராயணசாமி படத்துடன் வெளியான அந்த போஸ்டை பார்த்ததும் பலருக்கும், ஒட்டுமொத்த புதுச்சேரிக்கும் ஒரு நிமிஷம் தூக்கி வாரிப்போட்டது. ஏனெனில் போஸ்டரில் நாராணசாமி படம் வைக்கப்பட்டு இருந்த விதம் தான் இதற்கு காரணம். அதாவது மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்கள் வைப்பது போன்று நாராயணசாமியின் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டு இருந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பதறிய புதுச்சேரி
''ஐய்யய்யோ முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு என்னாச்சு'' என காங்கிரஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பதைபதைக்க ஆரம்பித்தனர். அந்த போஸ்டை கிளிக் செய்து பார்த்தபோது தான் அது நாராயணசாமி செய்தியாளர்களை சந்திக்கும் அறிவிப்பு என்பதை அறிந்து நிம்மதி அடைந்தனர். சர்ச்சைக்குரிய அந்த போஸ்டுக்கு கீழே பலரும் வேடிக்கையாக இரங்கல் பதிவுகளை வெளியிட்டனர்.
வேடிக்கையான இரங்கல் பதிவுகள்
இந்த சர்ச்சைக்குரிய போஸ்ட் ஒருபக்கம் வேடிக்கையான பதிவுகளை தூண்டியிருந்தாலும் இது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயமாகும். ஒரு சின்ன விஷயம் கிடைத்தாலும் அதை ஊதி பெரிதாக்கும் இன்றைய இணைய யுகத்தில், பாரம்பரியமிக்க தேசிய கட்சியின் ஒரு மூத்த தலைவர் அதுவும் ஒரு முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை இப்படியா வைப்பது? அந்த போஸ்டரை டிசைன் செய்தவர்கள் கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா? என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
