Puducherry Crime: புதுச்சேரி வில்லியனூர் அருகே சவுந்தர் என்ற ஓட்டுநர் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த ஒரு கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், அவரது தம்பியை எச்சரிப்பதற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி வில்லியனுார் அடுத்த உறுவையாறு பேட் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்(30). தனியார் கம்பெனியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சந்திரலேகா (28). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆகிறது. சவுந்தர் நேற்று இரவு மாமியார் வீடான உத்திரவாகினிபேட்டில் இருந்து தட்டாஞ்சாவடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

மர்ம கும்பல்

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் சவுந்தரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த சவுந்தர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சவுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 

எச்சரிக்கை விடுக்கும் வகையில் கொலை

முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு நடந்த வில்லியனூரில் ரவுடி தனபாலை 4 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தது. அந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சவுந்தரின் தம்பி ரவுடி ஜீவா, ஞானபிரகாசம், சந்துரு உட்பட நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமினில் வந்த ஜீவா தலைமறைவாக உள்ளார். தனபாலின் கூட்டாளிகள் ஜீவாவை பழிக்குப்பழியாக கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்த நிலையில், அவருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவரது அண்ணன் சவுந்தரை, படுகொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.