கலெக்சன் கல்லா கட்டும் அக்கா... அக்கா... புதுவை முழுவதும் தமிழிசையை விமர்சிக்கும் போஸ்டர்கள்
புதுச்சேரியில் ஆளுநருக்கும் அரசுக்கு இடையேயான அதிகாரப் போட்டி தொடர்பாக ஆளுநர் தமிழிசையை விமர்சிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை கடுமையாக விமர்சித்து புதுச்சேரி முழுதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கா அல்லது துணைநிலை ஆளுநருக்கா என்ற விவாதம் நீண்ட காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல மற்றொரு யூனியன் பிரதேசமான தலைநகர் டெல்லியிலும் அரசில் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கா அல்லது முதல்வருக்கா என்ற சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அதில், பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும் நில விவகாரங்கள் தவிர்த்து, மற்ற துறைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என திட்டவட்டமாகக் கூறப்பட்டிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் எதிரொலித்தது. புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் கடுமையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை விமர்சித்து வந்தனர்.
முதல்வர் ரங்கசாமி உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறினார். துணைநிலை ஆளுநர் தமிழிசை இந்த தீர்ப்பு டெல்லிக்கு மட்டுமே பொருந்தும் என்றும் புதுச்சேரிக்கு பொருந்தாது என்றும் கூறியிருந்தார். இதற்கு எதிர்கட்சிகளும் சமூகநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதன் வெளிப்பாடாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் தமிழிசை சவுந்தர்ராஜனை காட்டமாக விமர்சிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், போஸ்டர் ஒட்டிய திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
From The India Gate: கர்நாடக தேர்தலில் கலைந்த கனவுகளும் பூனையாக மாறிய சிங்கமும்!