டெல்லி அரசுக்கு அதிகாரம் வழங்கும் உச்ச நீதிமன்றத தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்றம் தொடர்பான நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்ததன் மூலம் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளது எனவும் சாடியுள்ளார்.
சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய கெஜ்ரிவால், "இது ஒரு அவலமான நகைச்சுவை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒலே வாரத்தில் ரத்து செய்துவிட்டனர். மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு வெளிப்படையாக சவால் விடுக்கிறது. இது உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அவமதித்து, அதன் மாண்பைக் குறைக்கும் செயலாகும்" என்று தெரிவித்தார்.

இதை எதிர்த்து டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யும் எனவும் கூறிய அவர், அரசியலமைப்புக்குப் முரணான இந்தச் சட்டத்தை கொண்டுவருவதற்காக உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை வரை மத்திய அரசு காத்திருந்திருக்கிறது எனவும் கெஜ்ரிவால் சாடினார்.
டெல்லியில் பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும் நில விவகாரங்கள் தவிர்த்து, அதிகாரிகளின் நியமனம் மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் மே 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இத்தீர்ப்பை அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை ரத்து செய்வதைப் போல, மத்திய அரசு வெள்ளிக்கிழமை அவசரச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏன் இந்த முறையும் கந்தீரவா மைதானத்தில் பதவியேற்றுக் கொண்டார் சித்தராமையா? இதுதான் ரகசியம்!

மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்தில், டெல்லியில் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும், பணியமர்த்துவதற்கும் சிவில் சர்வீஸ் ஆணையம் ஒன்றை அமைப்படும் எனவும் டெல்லி முதல்வரும் மத்திய அரசு சார்பில் 2 அதிகாரிகளும் அதில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளது. இதனால் இந்தக் குழு எடுக்கும் முடிவுகள் பெரும்பான்மை அடிப்படையில் மத்திய அரசுக்குச் சார்பாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால், டெல்லி அரசு தனது அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்ள மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
