வாகன ஓட்டிகளிடம் அத்துமீறிய போதை ஆசாமிகள்; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
புதுவையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதை தலைக்கேறிய இளைஞர்கள் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் அத்துமீறியதால் 26 வயது இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த நான்கு வாலிபர்கள், ஒரு இளம் பெண் ஆகிய 5 பேரும் அவர்களின் நண்பருடைய பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு நகரப் பகுதியில் உள்ள ஒரு மதுபான விடுதியில் அதிகாலை 2 மணி வரை மது அருந்தியுள்ளனர். இதில் போதை தலைக்கேறிய நிலையில் தன் நிலை மறந்த 5 பேரும் புஸ்ஸி வீதி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் அருகே நின்று கொண்டு சாலையில் வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்தும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டியும் வெகு நேரமாக ரகளையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது புதுச்சேரி மூல குளத்தைச் சேர்ந்த விஷால் (வயது 26) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது அவரை அச்சுறுத்தும் வகையில் ஒருவர் கையை ஓங்கி அடிக்க முற்பட்டுள்ளார். இதில் நிலைத்தடுமாறிய விஷால் எதிரில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளனார். இதனை அடுத்து ரகளையில் ஈடுபட்ட நான்கு பேரும் ஓடி சென்று பார்க்கும்போது விஷால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.
கடலூரிலும் நிலக்கரி சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி கோரிக்கை
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து திடீரென்று தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒதியன் சாலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விஷாலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் நள்ளிரவு இரண்டு மணியளவில் நான்கு வாலிபர்கள், ஒரு இளம் பெண் சேர்ந்து சாலையில் செல்வோரிடம் ரகளையில் ஈடுபடுவதும், அப்போது அவர்களை விஷால் கடக்க முயலும் போது ஒருவர் கையை ஓங்கி அடிக்க முயற்சிப்பதும் தெரியவந்தது. இதனாலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது என்று முடிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஐந்து பேரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவாரூர் மத்திய பல்கலை. மாணவிகள் மீது மதுபோதையில் இளைஞர்கள் தாக்குதல்
இந்த நிலையில் விஷால் இறந்ததை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று அவரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கை விபத்து என்று பதிவு செய்வதா?அல்லது கொலை வழக்காக பதிவு செய்வதா? என்று காவல் துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.