சில்லறை இல்லை என்று கூறும் பக்தர்களிடம் கூகுள் பேயில் பணம் அனுப்ப சொல்லி அத்து மீறும் திருநங்கைகள்
புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற மனக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் யாசகம் பெறும் திருநங்கைகள் பணம் கேட்டு அடாவடி செய்வதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி சுற்றுலாத்தலமாக இருப்பதால் நாள்தோறும் புதுச்சேரி நோக்கி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் படை எடுத்து வருகின்றனர். இவர்கள் புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள், கடற்கரை, கோவில்கள், மேலும் படகு குழாம் என பல பகுதிகளுக்குச் சென்று பொழுதை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் உலா வரும் திருநங்கைகள் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் இல்லை என்றால் கூகுல் பேவில் பணம் போட சொல்லி தொந்தரவு செய்வதாகவும், அப்படி இல்லையென்றால் சபித்து விடுவதாக கூறுவதாகவும் பரவலாக புகார்கள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நகர பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற உலகப் புகழ்வாய்ந்த மனக்குள விநாயகர் கோவில் உள்ளது. புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் அனைவரையுமே வந்து செல்லக்கூடிய இடமாக இந்த கோவில் உள்ளது. இதனால் இங்கு திருநங்கைகளின் கூட்டமும் அதிகமாக இருக்கும். காலை 6 மணி முதல் திருநங்கைகள் சாரைசாரையாக கோவிலை சுற்றி வலம் வருவது வாடிக்கையாக உள்ளது.
70 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளி; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை சூழ்ந்துகொள்ளும் திருநங்கைகள் அவர்களிடம் நெற்றியில் பொட்டு வைத்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பணம் இல்லை என்றால் கூகுள் பேவில் போடுங்கள் என்று கூறி பின்னாடியே சென்று அவர்களை விரட்டுவதாகவும், அப்படியும் மீறி பணம் இல்லை என்று கூறினால் சபித்து விடுவோம். எங்கள் சாபத்திற்கு ஆளாகாதீர்கள் என்று மிரட்டி வருகின்றனர்.
இந்த நிகழ்வை மனக்குள விநாயகர் கோவில் பகுதியில் கடை வைத்திருக்கும் ஒருவர் சுற்றுலா பயணிகளிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருநங்கைகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கோவில் நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.