70 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளி; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை கற்பழிக்க முயன்ற தோட்ட தொழிலாளிக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது தோட்டத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 37) என்பவர் தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார்.
வழக்கம் போல் தோட்டத்து வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இரவு மூதாட்டி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது தங்கராஜ் குடிபோதையில் அங்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனிமையில் இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், தங்கராஜிடம் இருந்து தப்பித்த மூதாட்டி உடனடியாக வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி தம்மை தற்காத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக மூதாட்டி பேளுகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தங்க ராஜை கைது செய்தனர்.
வழக்கு தொடர்பான விசாரணை வழக்கு சேந்தமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஹரிஹரன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட தங்கராஜ்க்கு 1 வருடம் சிறையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.