புதுவையில் 11 பேர் கொண்ட கஞ்சா மாஃபியா கும்பல் அதிரடி கைது

புதுச்சேரியில் தொழிற்சாலை பகுதிகளில் தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 11 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

11 members of ganja gang arrested by puducherry police

புதுச்சேரி அடுத்த துத்திப்பட்டு தொழிற்சாலை பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக கோரிமேடு காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது 2 பேர் தப்பியோட முயன்ற நிலையில், அவர்களை மடக்கி பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். 

விசாரணையில் அவர்கள், விழுப்புரம், பூந்தோட்டம், திருச்சி மெயின் ரோட்டில் வசிக்கும் ஓட்டுநரான அபாஸ் (வயது 37), விழுப்புரம், ராமநாதபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி சுபாஷ் சந்திரபோஸ் (20) என்பதும், இவர்கள் 2 பேரும் அப்பகுதிக்கு வரும் தொழிலாளிகளிடம் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. 

பணம் தராவிட்டால் இலவச மின்சாரம் கிடையாது; அதிகாரிகளின் அடாவடி தனத்தால் கதி கலங்கும் நெசவாளர்கள்

இவர்களிடம் இருந்து மொத்தம் 3.5 கிலோ கஞ்சா, அவற்றை சுற்றி புகைக்க பயன்படுத்தும் ஓ.சி.பி பேப்பர்ஸ் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்பு அவர்களிடம் விசாரணை நடத்தியபோது சுரேஷ் என்பவர் மூலம் கஞ்சா விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து சேதராப்பட்டு சுரேஷ் (26), துத்திப்பட்டு பிரதாப்ராஜ் (28), பிளோமின்தாஸ் (24), சுபாஷ் (25) உள்ளிட்ட 4 பேரையும் அடுத்தடுத்து காவல் துறையினர் கைது செய்தனர். 

ரௌடியான இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா, வெடிகுண்டு, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து கோரிமேடு காவல் துறையினர் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். இதேபோல் கோரிமேடு எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான காவல் துறையினர், இசிஆர் லதா ஸ்டீல்ஸ் அருகே மகாத்மா நகர் பகுதியில் ரோந்து சென்றனர். 

மதுரை பறக்கும் பாலத்தில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு பலி

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக கும்பலாக நின்ற 5 பேரை சுற்றிவளைத்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அவர்களை சோதனையிட்டனர். அப்போது 230 கிராம் கஞ்சா பொட்டலங்களை அவர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், மகாத்மா நகர் ஜான் பெலிக்ஸ் (21), மடுவுபேட் ராம்கி (25), அரியாங்குப்பம் நேதாஜி நகர் மோகன்தாஸ் (23), முதலியார்பேட்டை யோகேஷ் (23), கதிர்காமம் பாலாஜி (22) ஆகியோர் என்பதும், 

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொள்முதல் செய்து புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது. மேலும் கைது செய்யப்பட்டவர்களில் பாலாஜியை தவிர மற்றவர்கள் மீது கஞ்சா, அடிதடி வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் 5 பேர் மீதும் கஞ்சா பிரிவில் வழக்குபதிந்து கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

2 காவல்நிலையங்களிலும் கஞ்சா வழக்கில் கைதான 11 பேரும் இன்று மதியம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்படடு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பாக ரோந்து சென்று கஞ்சா கும்பலை கைது செய்த கோரிமேடு, சேதராப்பட்டு போலீசாரை வடக்கு எஸ்பி பக்தவச்சலம் பாராட்டினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios