காவல் நிலையத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணத்தின் மர்மத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்குவாரா ? என்று எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை,புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் 19.4.2022 அன்று இரவு நடைபெற்ற வாகன தணிக்கை சோதனையில், ஆட்டோவில் பயணித்த விக்ணேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் சோதனை செய்த போலிசார் அவர்கள் இருவரிடமும் கஞ்சா, கத்தி ஆகியவை இருந்ததாகவும் விசாரணைக்காக தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணையின் போது, அப்போது காவலர்கள் தாக்கியதால் விக்ணேஷ் வலிப்பு வந்து இறந்து போனதாகவும் காவல் துறையின் தரப்புல் சொல்லப்படுகிறது. 

இந்நிகழ்வின் போது ஒரு எஸ்.ஐ, ஒரு காவலர் மற்றும் ஊர்காவல்படை காவலர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் காவலர் தாக்குதலால் கொல்லப்பட்ட விக்னேஷ் குடும்பத்தாரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் விக்னேஷ் அவரது சகோதரர் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்துள்ளார். 

காவலர் தாக்குதலில் இறந்த திரு. விக்னேஷ் சென்னை கடற்கரையில் வயிற்றுப் பிழைப்புக்காக சுற்றுலா பயணிகளுக்கு குதிரை சவாரி செய்ய வைத்து வாழ்க்கை நடத்தி வரும் ஒரு சாதாரான ஏழைத் தொழிலாளி. அவர்களது குடும்பமே வறுமையில் வாடி வருகிறது. பெற்றோரும் இல்லாத நிலை. காவல் நிலையத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணத்தின் மர்மத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்குவாரா? அவர்கள் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவர்களை விசாரித்து, வழக்கு பதிவு செய்து முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். 

இது காவல்துறையினரின் கடமை. ஆனால் அவ்வாறு செய்யாமல், விக்னேஷ் காவல்நிலையத்தில் காவலர்களினால் தாக்கப்பட்டு, மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அம்மாவின் ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்ற போது நாங்களே இதனை முதலில் சிபிசிஐடி வசமும், பிறகு அதனை சிபிஐ வசம் மாற்றினோம். 

காவலர் தாக்குதலில் இறந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், மேலும் இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த அரசை வலியுறுத்துகிறோம். மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்’ என்று அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க : ஏன்டா திமுகவுக்கு ஓட்டு போட்டோம்னு மக்கள் ஃபீல் பன்றாங்க தெரியுமா ? மீண்டும் ஃபார்முக்கு வந்த கே.டி.ஆர் !