துணை முதலமைச்சர் பதவிக்கு ஒப்புக்கொண்டது ஏன்? டி.கே சிவக்குமார் விளக்கம்
கர்நாடகாவின் துணை முதலமைச்சர் பதவிக்கு ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸின் நலன் கருதி துணை முதல்வராக பதவியேற்க ஒப்புக்கொண்டதாக கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர் " கர்நாடகா மக்கள் முன் காங்கிரஸ் கட்சிக்கு உறுதிப்பாடு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. எனவே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மற்றும் காந்தி குடும்பத்திற்கு நான் தலைவணங்க வேண்டும். கட்சியின் நலன் கருதி (ஃபார்முலாவுக்கு நான் ஒப்புக்கொண்டேன்). ஏனென்றால் சில நேரங்களில் பனி உடைந்து போக வேண்டும். இறுதியில், கர்நாடக மக்களுக்கு நாம் என்ன அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளோம், அதை வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளது," என்று தெரிவித்தார்.
சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் கூறுகையில், "நான் முழு மகிழ்ச்சியடையவில்லை, ஆனால் கர்நாடகத்தின் நலன் கருதி நாங்கள் எங்கள் உறுதிமொழியை நிறைவேற்ற விரும்பினோம். அதனால்தான் டி.கே. சிவகுமார் ஏற்க வேண்டியிருந்தது. எதிர்காலத்தில் நாம் பார்க்க வேண்டியதிருக்கும், நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ... டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று விரும்புகிறேன் ஆனால் அது நடக்கவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்". என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : மத்திய அமைச்சரவை மாற்றம்.. கிரண் ரிஜிஜுவுக்கு புதிய துறை ஒதுக்கீடு.. புதிய சட்ட அமைச்சர் யார் தெரியுமா?
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் முதலமைச்சர் யார் என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வந்தது. முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தனித்தனியாக சந்தித்து பேசினர். மேலும் இரு தலைவர்களும் ராகுல்காந்தியையும் தனித்தனியே சந்தித்தனர்.
அதன்படி சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியும், டி.கே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. முதல் 2.5 ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2.5 ஆண்டுகள் டி.கே சிவக்குமாரும் முதலமைச்சராக இருப்பார்கள் என்று கூறப்பட்டது.
எனினும் கர்நாடக முதல்வர் பதவியை யாருக்கு வழங்க வேண்டும் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. இந்த சூழலில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இருப்பார் என்று காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவக்குமாருக்கு 6 இலாகாக்களுடன் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த 61 வயதான சிவக்குமார், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருக்கிறார். நெருக்கடியான நேரங்களில் கட்சிக்கு துணையாக இருந்த சிவக்குமார், கட்சியின் தீவிர விசுவாசியாகவும் இருந்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Siddaramaiah As New CM Of Karnataka: கர்நாடகா துணை முதல்வராவதை உறுதி செய்த டி.கே. சிவகுமார்!!