முகமது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து கூறிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவர் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் கடவுளான நபிகள் நாயகம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து கதார், சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இதனிடையே, பாஜக தலைமை அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இவருடன் சேர்ந்து டெல்லி ஊடக பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டாலும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த நுபுர் சர்மா
டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டமும், பல்கலைக்கழக சட்ட கல்லூரியில் LLB பட்டமும் பெற்றுள்ள 37 வயதான நுபுர் சர்மா, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சட்ட படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
அரசியல் பயணம்
ஒரு மாணவர் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய நுபுர் சர்மா, 2008 இல், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். 2015ம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை புது டெல்லி தொகுதியில் நுபுர் சர்மா எதிர்த்து போட்டியிட்டார். அதில், 31583 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பாஜக-வில் பொறுப்பு
பாஜக-வின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் முக்கிய பொறுப்பில் இருந்த நுபுர் சர்மா, இளைஞர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் டெல்லி மாநில செயற்குழு உறுப்பினர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார். 2017 ஆம் ஆண்டில், டெல்லி பாஜக-வின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
2020ல், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தேசிய அளவிலான குழுவை அமைத்தபோது நுபுர் சர்மா, தேசிய செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் அந்த பொறுப்பில் பல்வேறு செய்தி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
Read This : பாஜக தலைவர்கள் சர்ச்சை பேச்சு: இந்தியப் பொருட்களை புறக்கணிக்க ஓமன் மதகுரு அழைப்பு..!
நுபுர் சர்மாவை பின்தொடரும் அமைச்சர்கள்
சமூக வலைத்தளமான ட்விட்டரில், நுபுர் சர்மாவை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரிராஜ் சிங், மற்றும் பூபேந்திர யாதவ்; பாஜக.,வின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா; எம்.பி.க்கள் மனோஜ் திவாரி, கவுதம் கம்பீர், மற்றும் பர்வேஷ் வர்மா, மற்றும் பலர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read This : பாஜகவில் இருந்து நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இடைநீக்கம்... கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை!!
