சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். பாஜகவின் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வந்த நுபுர் சர்மா, சமீபத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஞானவாபி வழக்கு குறித்த விவாதத்தில் இஸ்லாமிய இறை தூதுவர் நபி குறித்து தவறான சில கருத்துக்களை பதிவு செய்தார். ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து பேசுகையில் நபியை அவமதிக்கும் வகையில் மோசமான கருத்துக்களை நுபுர் சர்மா பேசினார். இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், நான் அப்படிப்பட்ட கருத்துக்களை பேசவே இல்லை என்று அவர் மறுத்தார். சர்வதேச அளவிலும் சில இஸ்லாமிய தலைவர்கள் இந்த வீடியோக்களை பகிர தொடங்கினர். இந்த நிலையில் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பாஜகவின் நுபுர் சர்மா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

அவரை தொடர்ந்து நவீன் குமார் ஜிண்டாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேசும் வகையில் இவர் ட்விட் செய்து இருந்தார். நபிகளை விமர்சனம் செய்து அவர் ட்விட் செய்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். முன்னதாக நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் 40 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையே மோதல் பெரிதான நிலையில் 36 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். 1500 பேர் மீது இதில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதனிடையே பாஜக சார்பில், பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது, எந்த மதத்தை சேர்ந்த தலைவர்களையும் விமர்சிப்பதை பாஜக ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் எந்த பிரிவையும், மதத்தையும் இகழ கூடிய கொள்கைகளையும் பாஜக கடுமையாக எதிர்க்கிறது. அது போன்ற கருத்துக்கள், கொள்கைகளை, நபர்களை பாஜக என்றும் ஆதரிக்காது. இந்திய அரசியலமைப்பு சட்டம் எப்போதும், எல்லோருக்கும், தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றவும், பிடித்த மதத்தை பின்பற்றி வாழவும், மற்ற மதங்களை மதிக்கவும் வழி செய்து கொடுத்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அதற்கான உரிமையை கொடுத்துள்ளது, 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்திய நாட்டில், எல்லோருக்கும் சமமான, சம மரியாதை கொண்ட ஒரு சிறந்த இந்திய நாட்டை நாம் உருவாக்க வேண்டும். இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருங்கிணைத்த வளர்ச்சிக்கும் ஏற்றபடி நாம் உழைக்க வேண்டும். எல்லோரும் வளங்களையும், வளர்ச்சிகளையும் சமமாக பெற்றிட நாம் செயலாற்ற வேண்டும் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.