திமுக -அதிமுகவை சம தூரத்தில் வைத்து பிரேமலதா பார்த்து வந்த நிலையில் எல்.கே.சுதீஷ் ஜெயலலிதா உடன் பிரேமலதா படத்தை பகிர்ந்து இருந்தார்.

ஜெயலலிதா உடன் பிரேமலதா உள்ளது போல் எல்.கே.சுதீஷ் பகிர்ந்த புகைப்படத்தால் சலசலப்பு ஏற்பட்டது. திமுக -அதிமுகவை சம தூரத்தில் வைத்து பிரேமலதா பார்த்து வந்த நிலையில் எல்.கே.சுதீஷ் ஜெயலலிதா உடன் பிரேமலதா படத்தை பகிர்ந்து இருந்தார். சில நாட்களுக்கு முன் பிரேமலதா -சுதீஷை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சந்தித்துப் பேசியிருந்தார். மற்றொருபுறம் தேமுதிக, திமுகவுடன் கூட்டணி சேர தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த புகைப்படம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ‘‘நாங்கள் தெளிவாக நேற்று அதற்கான தெளிவான விளக்கம் சொல்லிவிட்டோம். எனக்கு அவார்டு பங்க்ஷனில் ‘பெண் ஆளுமை’ என்று அரசியல் ரீதியாக விருது கொடுத்தார்கள். அப்போது சுதீஷ் அங்கே பேசும்போது ,‘‘ஏற்கனவே பெண் ஆளுமையாக அரசியலில் இருந்தவர்கள் அம்மையார் ஜெயலலிதா. அவர் அதிமுகவின் பொது செயலாளராக இருந்தார். இன்றைக்கு பிரேமலதா தேமுதிகவின் பொது செயலாளராக இருக்கிறார்.

பிரேமலதாவும் பல சவால்களை சந்தித்து, ஆளுமை மிக்க ஒரு தலைவராக வந்து கொண்டிருக்கிறார்’’ என்று இரண்டு பேரையும் ஒப்பிட்டு பேசினார். நாங்கள் ரெண்டு பேரும் இப்படி கை காட்டுவதைப் போல் சோசியல் மீடியாவில் போட்டோஸ் எல்லா இடத்திலும் பகிரப்பட்டது. அதை எடுத்து சுதீஷ் அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அதுதானே ஒழிய, வேறொன்றுமில்லை. நான் மறுபடியும் உங்களிடம் சொல்கிறேன். கேப்டன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை தன் மானசீக குரு என்று திரை உலகில் இருந்த போதும்சரி, அரசியலுக்கு வந்த பிறகும்சரி, பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

அதனால்தான் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தை ஜானகி அம்மா, கேப்டன் கைகளில் கொடுத்தார். 2005ல் நாங்கள் கட்சி ஆரம்பித்தபோது அந்த வாகனத்தில்தான் கேப்டன் மாநாட்டுக்கு வந்தார். அந்த வண்டி நம்பர் 2005. கட்சியை ஆரம்பித்ததும் 2005. அதுதான் கேப்டன் சொல்வார். ‘‘இது எழுதப்பட்டது. இதை யாராலும் தடுக்க முடியாது’’ என்று அந்த மாநாட்டில் கேப்டன் சொன்னார். அதுக்கு அடுத்து பார்த்தால் இன்றைக்கு வரைக்கும் எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளிக்கு இந்த வருடம் வரை ஒவ்வொரு ஆண்டும் பண உதவி, உணவு என கேப்டன் பிறந்தநாள் என்று தந்து கொண்டிருக்கிறோம்.

இது பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆரால் பயன் பெற்றவர்கள்கூட, ஒரு முறை கூட நிதியோ, உதவியோ வழங்கவில்லை. ஆனால், கேப்டன் பல ஆண்டுகளாக இதை செய்து கொண்டிருக்கிறார். எல்லா இடத்திலும் கேப்டன் ஓப்பனாக சொல்கிறார், எனது மானசீக குரு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்று. அதனால்தான் அன்னதான பிரபு என்று இன்றைக்கு கேப்டனை உலகமே என்று சொல்கிறது. எங்கள் தலைமை கழக செயலகத்தில் வேறொருவரது சிலை இருக்கிறது என்றால் அது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடைய சிலைதான். அப்படி நாங்கள் பகிரங்கமாக அதை ஏற்றுக் கொண்டோம்.

எங்கள் தலைமை அலுவலகத்தில் இதேபோல் ஒரு பிரஸ்மீட்டில் இன்றைக்கு நீங்கள் அரசியல் துறையில் இருக்கிறீர்கள். அரசியலில் யாரை நீங்கள் எந்த பெண் ஆளுமையை ரோல் மாடலாக எடுத்துக் கொண்ட எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். இப்போதும் அதை உங்களிடம் சொல்கிறேன். ஆளுமை மிக்க அரசியல்வாதி அம்மையார் ஜெயலலிதா அவர்கள்தான். நான் சொல்ல வேண்டுமென்றால் அம்மையார் இந்திரா காந்தியை சொல்லலாம். மம்தா பானர்ஜியை சொல்லலாம். வேறு யாரை வேண்டுமானாலும் சொல்லலாம். ஏன் நான் அவர்களை எல்லாம் சொல்லவில்லை என்றால் அவர்களெல்லாம் வடமாநிலத்துக்காரர்கள். அவர்களில் ஒருவர் பிரதமராக இருந்தவர்.

மற்றொருவர் முதலமைச்சராக இருப்பவர். அவர்களுக்கும், நமக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் நாம் வாழ்ந்த காலத்தில், சமகாலத்தில் அம்மையார் ஜெயலலிதா கட்சியையும், ஆட்சியையும் கட்டுக்கப்போடு, சீரும் சிறப்புமாக ஆளுமை மிக்க பெண் முதல்வராக அவர் ஆட்சி செய்தார். எனவே என் அரசியல் வாழ்க்கையில் என்னுடைய ரோல் மாடல் செல்வி அம்மையார் ஜெயலலிதா அவர்கள்தான் என்று நான் பொதுச் செயலாளராக பதவி ஏற்ற போதுபேசி இருக்கிறேன். அதனால்தான் அந்த போட்டோஸ் கம்பேரிசன் வந்தது. அதனால் இதை நாங்கள் விரும்பிப் போடவில்லை. இது சோசியல் மீடியாவில் வந்தது’’ என விளக்கமளித்துள்ளார்.