அண்ணாமலை திடீர் டெல்லி விசிட்: அஜெண்டா என்ன?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது

What is the reason behind annamalai sudden delhi visit

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய நிலையில், திடீரென இன்று காலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதற்கிடையே டெல்லி சென்ற ஆளுநர் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிடோரை சந்தித்து மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

ஆளுநர் ரவி சென்னை வந்த நிலையில், அண்ணாமலையின் டெல்லி பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என அண்மையில் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இது பாஜகவுக்குள் புயலை கிளப்பிய நிலையில், டெல்லி சென்றுள்ள அண்ணாமலை, பாஜகவின் மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக மாநில அளவில் கட்சியை பலப்படுத்தும் பணிகளையும் பாஜக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சில மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை அக்கட்சி மேலிடம் சில நாட்களுக்கு முன்னர் நியமித்தது. அமைப்பு ரீதியாக மேலும் சில மாற்றங்களையும் அக்கட்சி செய்யவுள்ளது.

பாஜகவை பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்துள்ளதால், இயல்பாகவே ஆட்சி மீது ஏற்படும் அதிருப்தி, எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைவது, பாஜகவுக்கு பெரிதும் கைகொடுக்கும் வடமாநிலங்களில் கூட்டணி மாறியது உள்ளிட்டவைகள் அக்கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என தெரிகிறது. எனவே, கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகளையும் அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவுக்கு எப்போதுமே தென் மாநிலங்கள் மிகப்பெரும் சவாலாகவே இருக்கும். எனவே, தென் மாநிலங்களை குறி வைத்து மிஷன் சவுத் திட்டத்தையும் அக்கட்சி செயல்படுத்தி வருகிறது. இந்த முறை தென் மாநிலங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் பாஜக, மைக்ரோ மேனேஜ்மெண்ட் அடிப்படையில் கீழ்மட்ட அளவில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஆளுநர் ரவி.! ராஜ்பவனுக்கு திடீரென சென்ற தலைமைச் செயலர்- காரணம் என்ன.?

மேலும், தமிழகத்தில் இந்த முறை வேலூர், தென் சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், கோவை, திருப்பத்தூர், நீலகிரி, விழுப்புரம் ஆகிய 9 மக்களவை தொகுதிகளை அதிமுக கூட்டணியில் பெற்றுவிட அக்கட்சியின் தலைமை முனைப்பு காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் பயணித்து வரும் பாஜகவுக்கு, கடந்த 2019ஆம் தேர்தலில் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, அதிமுக பிரிவுகளை இணைத்து 2024 தேர்தலை பலமாக எதிர்கொள்ளவும் அக்கட்சி திட்டமிட்டு வருகிறது. ஆனால், பாஜகவின் திட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி இதற்கு பிடி கொடுக்க மறுக்கிறார். ஒருவேளை அணிகள் இணையவில்லை என்றால், ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டு வரவும் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதிமுக கூட்டணியில் மக்களவை தேர்தல் என்பது பாஜகவுக்கு ப்ளான் ஏ மட்டுமே. தமிழகத்தில் வலுவாகக் காலூன்ற வேண்டும் என்பதே பாஜகவின் ப்ளான் பி. இதற்கான முன்னெடுப்புகளையும் அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. அண்மையில் சென்னை வந்த அமித் ஷா, தென் சென்னை மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது கூட 25 தொகுதிகள் இலக்கு என பேசியது நினைவுகூரத்தக்கது.

இந்த பின்னணியில், டெல்லியில் சென்றுள்ள அண்ணாமலை பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ஆளுநர், திமுக அரசு மோதல் போக்கு, கூட்டணி விவகாரங்கள், தமிழக அரசியல் கள நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை செய்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்க்கும் என அண்மையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். ஏற்கனவே பாஜக - அதிமுக கூட்டணிக்குள் புகைச்சல் இருக்கும் நிலையில், அவரது இந்த கருத்து மேலும் விரிசலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறுகிறார்கள். அதேசமயம், கூட்டணியில் பாஜக கேட்கும் அதிக இடங்களை கொடுக்காமல் இருப்பதற்காகவும், அதிமுகவின் மற்ற அணிகளை கூட்டணிக்குள் கொண்டு வராமல் இருக்கவுமே இதுபோன்று அதிமுக தரப்பில் செக் வைப்பதாக கூறுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்தும், அதிமுக-பாஜக உறவு குறித்தும் ஜேபி நட்டாவிடம் அண்ணாமலை பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மக்களவை தேர்தல் பணிகள், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் அண்ணாமலை அவரிடம் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. அத்துடன், வருகிற 28ஆம் தேதி ராமேஸ்வரம் முதல் சென்னை வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இது பாஜகவை தமிழகத்தில் வலுப்படுத்த உதவும் என அக்கட்சி நம்புகிறது. இதுகுறித்தும் ஜேபி நட்டாவிடம் அவர் பேசியதாக தெரிகிறது.

அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கவும் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அமித் ஷா உடனான சந்திப்பின் போது, தமிழக அரசியல் களம், மக்களவை தேர்தல் பணிகள் குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலை டெல்லி பயணத்தில் செந்தில் பாலாஜி விவகாரமும் முக்கிய அம்சமாக இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios