டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஆளுநர் ரவி.! ராஜ்பவனுக்கு திடீரென சென்ற தலைமைச் செயலர்- காரணம் என்ன.?
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்டத்துறை அதிகாரிகளை சந்தித்த ஆளுநர் ரவி நேற்று சென்னை திரும்பிய நிலையில், இன்று காலை தமிழக தலைமைசெயலாளர் சிவ்தாஸ் மீனா திடீரென ஆளுநரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி ஆளுநர் ரவி முதலமைச்சர் கடிதம் எழுதினார். இதற்கு பதில் கடிதம் எழுதிய முதலமைச்சர் அரசின் நடவடிக்கையில் தலையிட வேண்டாம் என தெரிவித்திருந்தார். மேலும் அமைச்சரை நியமிப்பதும், மாற்றுவதும் முதலமைச்சரின் அதிகாரம் என கூறியிருந்தார். இதனையடுத்து ஒரு சில நாட்களிளேயே அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டார். இந்த உத்தரவு தமிழக முதலமைச்சரை அதிர்ச்சியடைய வைத்த நிலையில் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது.
இதனையடுத்து ஒரு சில மணி நேரத்தில் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்தார்.இந்த பரபரப்புக்கு மத்தியில் ஆளுநர் ரவி கடந்த வாரம் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை அதிகாரிகள், மற்றும் சட்டத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசித்தார். இந்த ஆலோசனையின் போது அமைச்சரவையில் இருந்து ஒருவரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? என விவாதித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுமார் 6 நாட்கள் பயணத்தை முடித்து நேற்று இரவு சென்னை வந்தடைந்தார் ஆளுநர் ரவி.
இதனிடையே இன்று காலை ராஜ்பவனில் தலைமைசெயலாளர் சிவ்தாஸ் மீனா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமை செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை செயலாளாராக சிவ்தாஸ் மீனா கடந்த வாரம் பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.