தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய பெயரை விளம்பரப்படுத்தி அனைத்து ஊடகங்களும் அவரைப் பற்றி பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவ்வாறு பேசி வருகிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளன், நாடு முழுவதும் 28,29 ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெட்ரோல் - டீசல் விலை உயர்விற்கு உக்ரைன் போரினை காரணமாக முன்னிறுத்துவது வேடிக்கையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அல்லது தனி உளவுத்துறை அமைக்க வேண்டும் எனவும் சாதி மத மோதல்களை தடுத்திடும் வகையில் சிறப்பு சைபர் கிரைம் உளவுத்துறை அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தூபாய் பயணம் மேற்கொண்டுள்ளது நம்பிக்கை அளிப்பதாக கூறிய அவர், தமிழக பொருளாதார வளர்ச்சியில் முதன்மை காணும் என்றார்.மேலும் கூட்டணி கட்சியினருக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடத்தை உரிய முறையில் பேச்சுவார்த்தை மூலமாக உரிய பதவிகள் வழங்கி இருப்பதற்கு தமிழக முதல்வருக்கும் குழுவிற்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக பேசினார்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் தற்போது ஆளுநரிடம் உள்ள நிலையில், அந்த தீர்மானத்தை விரைந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் கிடப்பில் போடாமல் ஒப்புதல் வழங்கி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கவன ஈர்ப்பு போபியோ வந்துள்ளது எனவும் அரசியல் பேசாமல் அவதூறு பேசி வருகிறார் எனவும் தன்னுடைய பெயரை விளம்பரப்படுத்தி அனைத்து தொலைக்காட்சிகளும் அவரைப் பற்றி பேச வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பேசி வருகிறார் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் தொழில் கண்காட்சியில் கலந்து கொள்ளவும், தொழில் முதலீட்டை ஈர்க்கும் நோக்கிலும் பயணம் மேற்கொண்டுள்ளார். அதுக்குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அதாவது தமிழ்நாட்டு மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஸ்டாலின் துபாய் செல்லவில்லை, தனது குடும்பத்தை பெருக்க தனது குடும்ப நிதியை பெருக்க சென்றிருக்கிறார். ஊழல் செய்த பணத்தை துபாய் வழியாக மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர முயற்சிகள் நடக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
அவரின் இப்பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் . இல்லையெனில் 100 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு போடப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி நோட்டீஸ் அனுப்பினார்.திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
