ஆர்எஸ்எஸ் அமைப்பின் நகைச்சுவை பிரிவு தான் நாம் தமிழர் கட்சி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நகைச்சுவை பிரிவு தான் நாம் தமிழர் கட்சி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் எப்போதுமே சில கட்சிகளுக்கு சில கட்சிகள் ஏழாம் பொருத்தம். காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் எதிரெதிர் துருவங்கள். மார்க்சிஸ்ட் பாஜக கட்சிக்கும் ஆகவே ஆகாது. திமுக, அதிமுக கட்சிகள் என்றைக்குமே ஆகாத கட்சிகள்.
அதே போல தான் நாம் தமிழர் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் என்றுமே ஆகாது. ஏழாம் பொருத்தமான இந்த கட்சிகள், தலைமையிலும் சரி.. 2ம் கட்ட மற்றும் 3ம் கட்ட நிர்வாகிகள் மத்தியிலும் எப்போதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவது வழக்கம்.

அரசியல் நேர்கோட்டில் கடுமையான சொல்லாடல்களை இவ்விரு கட்சிகள் பயன்படுத்திக் கொள்வது வெகு இயல்பான ஒன்று. அரசியல் மேடைகள் தவிர்த்து விவாத மேடைகள், பொது மேடைகளிலும் இவ்விரு கட்சிகள் எண்ணெய்யும், தண்ணீரும் போல… ஒட்டிக் கொள்ளவே கொள்ளாது.
இப்படி எதிரும், புதிருமாக கருத்து களத்தில் மோதி வரும் இக்கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் கருத்துகளும் அதிரடியாக தான் இருக்கும். அப்படித் தான் இப்போது லேட்டஸ்ட்டாக நாம் தமிழர் கட்சியை சகட்டுமேனிக்கு விளாசி இருக்கிறார் விசிகவின் வன்னியரசு.
நாம் தமிழர் கட்சியானது, ஆர்எஸ்எஸ்சின் நகைச்சுவை பிரிவு என்று போட்டு தாக்கி இருக்கிறார். சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து வன்னியரசு கூறி இருப்பதாவது:

மாரிதாசின் சித்தாந்தம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம். அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த விவாகரத்தில் கண்டிப்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
ஆதரவாளர்கள் என்பவர்கள் பெரிய மேதாவித்தனத்துடன் பேசுவார்கள், இங்கேயும் பேசுவார்கள், எங்கும் பேசுவார்கள். எங்களை பொறுத்தவரை அப்படி பேசுபவர்களை நாங்கள் உதிரிகளாக தான் பார்க்கிறோம்.
அம்பேத்கர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்துவிட்டார் என்று பேசுபவர்கள் அரைவேக்காட்டுத்தனமானவர்கள். இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக விசிக தொடர்ந்து பேசி வருகிறது. அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

அதிமுகவை கொஞ்சம், கொஞ்சமாக பாஜக கபளீகரம் செய்து வருகிறது. இன்னும் சொல்ல போனால் அதிமுக பாஜகவாக மாறி வருகிறது. ஒரு நாடு ஒரே தேர்தல் மூலம் திமுக அரசு 2024ம் ஆண்டோடு முடிந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிருப்பது இதை தான் காட்டுகிறது. ஒரே தேர்தல் என்பது மாநிலங்களின் பன்முகத்தன்மைக்கு எதிரானது.
சாதி ஆணவ படுகொலை பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குடிபெருமை கொலை, தமிழர்களுக்கு சாதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு எனது பதில் இதுதான்.
பாஜக என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு. அதேபோல ஏபிவிபி என்பது மாணவர் பிரிவு. விஎச்பி என்பது ஒரு பண்பாட்டு பிரிவு. அதுபோல ஆர்எஸ்எஸ் அமைப்பின் நகைச்சுவை பிரிவு தான் நாம் தமிழர் கட்சி. அப்படித்தான் சொல்ல முடியும். வேறு என்ன சொல்ல முடியும்.

பண்பட்ட அரசியல் என்பது சீமானிடம் இல்லை. மேடையில் செருப்பை தூக்கி காட்டுவது, காறி துப்புவது எல்லாம் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். நாகரிகமான சமுதாயத்தில் கொலையை யாரும் ஆதரிக்கல. அப்படி இருக்கும் போது குடி பெருமை கொலை என்று பேசுவது உடன்பாடில்லை.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் பல்வேறு மொழிகளில் சீமான் பேசுகிறார். இந்து சமூக கட்டமைப்பை பாதுகாப்பதே சாதிதான். குடிபெருமை பற்றி பேசுவதன் மூலம் ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை இவர் பேசுகிறார் என்று கடுமையாக பேசி இருக்கிறார் வன்னியரசு.
