குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற காத்தவராயன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது அவர் மரணடமடைந்துள்ளார்.

நேற்று திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ வும் முன்னாள் அமைச்சருமான கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் அவரது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஏராளமான திமுகவினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில் இன்று மீண்டும் ஒரு திமுக எம்.எல்.ஏ காலமாகியிருப்பது திமுக தலைமையை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

ஏற்கனவே திமுக பொதுச்செயலாளர் வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலையும் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்பழகன் கோமா நிலையில் இருப்பதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. அன்பழகன் உடல்நிலையை கருத்தில் கொண்டு மார்ச் 1 ம் தேதி தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இரண்டு நாட்களில் இரண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமும் பொதுச்செயலர் அன்பழகன் கவலைக்கிடமும் ஸ்டாலினை மட்டுமில்லாது ஒட்டுமொத்த திமுகவையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் மரணம்..!