Asianet News TamilAsianet News Tamil

திமுகவின் ஓராண்டு ஆட்சி.. சாதனையல்ல.. சோதனை - டிடிவி தினகரன் போட்ட லிஸ்ட் !!

திமுகவின் ஓராண்டு கால ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு தினம் தினம் சோதனையாகவே அமைந்திருக்கிறது என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

TTV Dinakaran has criticized the DMK one year rule as a day to day people of Tamil Nadu critical situation
Author
Tamilnadu, First Published May 6, 2022, 2:21 PM IST

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி பொறுப்புக்கு வந்தது. கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். அதன்படி நாளையுடன்  முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு ஆகிறது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சி அவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்வதைப் போல சாதனையல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கு தினம் தினம் சோதனையாகவே அமைந்திருக்கிறது. 

தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் பலவற்றை காற்றோடு பறக்கவிட்டுவிட்டார்கள். சொத்துவரியை உயர்த்த மாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னவர்கள், இப்போது மனசாட்சியே இல்லாமல் சொத்து வரியை 150% உயர்த்தி மக்களை வதைக்கிறார்கள். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்றவர்கள் இப்போது தீர்மானம் நிறைவேற்றியதாக பெருமைப் பட்டுக்கொள்கிறார்கள்.

TTV Dinakaran has criticized the DMK one year rule as a day to day people of Tamil Nadu critical situation

5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் வைத்த நகைக்கடன் எல்லாம் தள்ளுபடி என்றார்கள். இப்போது எதேதோ கணக்குகளைச் சொல்லி நகைக்கடன்களை தள்ளுபடி செய்தாகிவிட்டது என்று வாய்கூசாமல் அடித்து விடுகிறார்கள்.மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிடுவோம் என்று இவர்களால் முடியாது என்று தெரிந்தும் பச்சையாக பொய் வாக்குறுதியைக் கொடுத்தார்கள். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தபிறகு அதைப்பற்றி மூச்சே விட மறுக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து முன்களப்பணியாளர்களாக சேவையாற்றிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இப்போது அவர்களை உதாசீனப்படுத்துகிறார்கள்.  அம்மா மினி கிளினிக்குகளை மூடி அதில் வேலைபார்த்த மருத்துவர்களையும், செவிலியர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். நெல்லுக்கு ஆதார விலையை உயர்த்தியுள்ளோம் என்கிறார்கள் ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களை சரியான நேரத்தில் திறக்காமலும் முறையாக கொள்முதல் செய்யாமலும் விட்டதால் இலட்சக்கணக்கான நெல் மூட்டைகள் வீணாகின. 

கரும்புக்கான கொள்முதல் விலையை சிறிதளவு உயர்த்திவிட்டோம் என்கிறார்கள். ஆனால் ஆண்டுக்கணக்கில் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகையைப் பெற்றுத்தர எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயிகளுக்கு தொடர்ந்து இடையூறுகளையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் இராட்சத குழாய்களை கொண்டுவந்து இறக்குவதற்கு துணை போகிறார்கள். டி.ஆர்.பி.(TRB) தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாகக் காத்திருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு, இப்போது மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக காவல்துறையின் பணிப்பளுவைக் குறைக்கும் வகையில் பங்காற்றும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு  பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. புரட்சித்தலைவி அம்மா கொண்டுவந்த திட்டங்களை நிறுத்துவதும் பெயர் மாற்றம் செய்வதுமான வேலையை தி.மு.க.அரசு சத்தமில்லாமல் செய்து வருகிறது. ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், முதியவர்கள் என எத்தனையோ பேரின் பசியைப் போக்கிய அம்மா உணவகங்களை மூடத் துடிக்கிறார்கள். அதற்குப் பதிலாக கருணாநிதி பெயரில் புதிய உணவகங்களை திறக்கப்போகிறார்களாம்.  இப்படி அடுத்தவர் திட்டங்களை திருடி தங்கள் பெயரை வைத்துக் கொள்வதுதான் திராவிட மாடலா? 

TTV Dinakaran has criticized the DMK one year rule as a day to day people of Tamil Nadu critical situation

தாலிக்கு தங்கம் திட்டம்,அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்,விலையில்லா ஆடு,மாடு வழங்கும் திட்டம்,தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பெட்டகம் திட்டம்,மாணவர்களுக்கான மடிக்கணினித்திட்டம்,அம்மா குடிநீர் திட்டம், அம்மா சிமெண்ட் திட்டம் இப்படி பல்வேறு தரப்பு மக்களுக்கும் பயன் தரக்கூடியதாக இருந்த அம்மா பெயரிலான, அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டாலின் அரசு மூடுவிழா நடத்தி வருகிறது.  தீயசக்தியான தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாடு இருண்டுவிடும் என்பது மீண்டும் நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது. 

மின்சாரமில்லாமல் மக்களை விடிய விடிய விழித்திருக்க வைப்பதேதான் விடியல் அரசு என்று சொல்கிறார்கள் போலும். சென்னையில் தொடங்கி பல இடங்களில் தி.மு.க கவுன்சிலர்கள் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் ஆரம்பித்திருக்கிறார்கள். சேலத்தில் தி.மு.க பெண் கவுன்சிலர் நைட்டியோடு கோயிலுக்குள் சென்று அர்ச்சகரை மிரட்டி இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளை ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றும், இந்த ‘ஜெயிண்ட்’களை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் திரையரங்க உரிமையாளர்கள் விழிபிதுங்கி நிற்ப்பதாகவும் செய்திகள் வருகின்றன. 

யார் தயாரித்தாலும் படத்தை இவர்களிடம்தான் விற்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி உருவாகியிருப்பதாகவும், இவர்கள் தான் எந்தப் படம் எத்தெந்த திரையரங்கில் திரையிட வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் 2006 - 2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் செய்ததைப் போல மீண்டும் திரைத்துறையை கருணாநிதி குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்யத் துடிக்கிறார்கள் என்றும், கருணாநிதி குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் ஒவ்வொரு துறையாக நீளத் தொடங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

தி.மு.க.வின் மூத்த அமைச்சர் ஒருவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அதிகாரியை பொதுவெளியில் சாதிப்பெயரைச் சொல்லி திட்டுகிறார். ஆனால் அவரை சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி ஸ்டாலின் ஒத்தடம் கொடுக்கிறார்.சிறு வணிகர்களை பாதிக்கும் என்று இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்த அமேஸான், லூலூ நிறுவனங்களை இப்போது தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறார்கள். இதனால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?

உதவித்தொகையை உயர்த்தி கேட்டு அமைதியாக போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினரை வைத்து கைது செய்து துன்புறுத்துகிறார்கள். காவல் நிலைய லாக்அப் மரணங்கள் அதிகமாகி வருகின்றன. கொலை- கொள்ளை, பெண்கள்- சிறுமிகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு என சட்டம் – ஒழுங்கும் சந்தி சிரிக்கிறது.  தமிழகத்தின் ஒரே ஜீவாதார நதியான காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும் அளவுக்கு கர்நாடகா வந்துவிட்டது. அதனை தடுத்து நிறுத்த உருப்படியான ஒரு நடவடிக்கையையும் தி.மு.க அரசும் முதலமைச்சர் திரு.ஸ்டாலினும் எடுத்ததாக தெரியவில்லை.

நூறாண்டுகளுக்கு மேலாக முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து தமிழ்நாட்டிடம் இருந்து வரும் தண்ணீர் விடும் உரிமையையும் கேரளாவிடம் விட்டுக்கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.  தி.மு.க பதவிக்கு வந்த கொஞ்ச காலத்துக்காவது நல்லது செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எந்த அறிகுறியும் இந்த ஆட்சியில் தெரியவில்லை காரணம் தி.மு.க இன்னும் மாறவில்லை, இன்னும் திருந்தவில்லை, மக்களை ஏமாற்றும் மனப்பான்மை இவர்களை விட்டு விலகவில்லை என்பதைத்தான் இந்த ஓராண்டு கால ஆட்சி நமக்கு சொல்லும் செய்தி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அது போலத்தான், இந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சிக்கு கடந்த ஓராண்டு காலம்தான் உதாரணம்! " என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : திமுகவுக்கு எதிராக ஆதீனங்கள்..முட்டுக்கட்டை போடும் தருமபுரம் ஆதீனம்.! அப்செட்டில் இந்து அமைப்புகள்.!

இதையும் படிங்க : தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு விநாயகர் வாழ்த்து பாடல் - சர்ச்சையில் சிக்கிய வானதி சீனிவாசன் !!

Follow Us:
Download App:
  • android
  • ios