கடிதம் எழுதுவதற்கு முன்னால்.. இதை செய்யுங்க..தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த அண்ணாமலை

Annamalai : தமிழக முதலமைச்சர் இனி கடிதம் எழுதுவதற்கு முன்னால் அதில் எழுதப்படும் பொருள் குறித்து, ஒருசில நிமிடமாவது செலவிட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 

Tn bjp president annamalai statement about mk stalin govt and central govt relationship issue

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு, கடந்த, மே மாதம் 22 ஆம் தேதி மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைவராகக் கொண்டும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நிலைக்குழு தலைவராக கொண்டும், இந்திய மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், மீண்டும் புனரமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு இடையிலான இந்த கவுன்சிலில் அனைத்து மாநில முதல்வர்களும் ஆறு மத்திய அமைச்சர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். 

Tn bjp president annamalai statement about mk stalin govt and central govt relationship issue

மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏறத்தாழ ஒரு மாத காலத்திற்கு பிறகு, அந்த அறிவிப்பில் இருந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல், அரைகுறை தகவல்களுடன், இதுவரை நடைமுறையில் இல்லாத செயல்முறைகளை வேண்டி, தங்கள் அலுவலகத்திலிருந்து பிரதமரின் பார்வைக்கு, ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான செயல் திட்டங்களுக்கு பதிலாக, அறிவிப்பு அரசியலில் தாங்கள் காட்டும் ஆர்வம் இந்தக் கடிதத்தின் மூலம் புலப்படுகிறது. 1990 ஆம் ஆண்டில் இந்த கவுன்சில் தொடங்கப்பட்டதாக தாங்களே தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

அதன் பிறகு கடந்த 31 ஆண்டுகளாக இந்த கவுன்சில் 11 முறை மட்டுமே கூடியிருப்பதை தாங்கள் படபடப்பில் மறந்து விட்டீர்களா? இல்லை பரபரப்பிற்காக மறைத்து விட்டீர்களா ? ஆண்டிற்கு மூன்று முறை இந்த கவுன்சில் கூட வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கும் முன்பாக தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல் ஒன்று உள்ளது. கடந்த 2006ம் ஆண்டிற்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போதும் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுடன் இணைந்து திமுக மத்திய அரசில் முக்கியமான துறைகளில் அமைச்சக பதவிகளை வகித்துக் கொண்டிருந்த தங்கள் திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு முறை கூட தாங்கள் இந்த கூட்டத்தை கூட்ட வில்லை.

அதாவது மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்தபோது மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்ட எந்த முயற்சியும் எடுக்காமல், கவுன்சிலுக்கு மூடுவிழா நடத்தியதே திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். திமுக காங்கிரஸ் கூட்டணி அரசால் கைவிடப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான இந்த கவுன்சில் அமைப்பினை, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுத்த முயற்சியால் கடந்த 16.7. 2016 அன்று மீண்டும் உயிர்ப்பிக்கபட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த எட்டு ஆண்டு கால ஆட்சியில், மாநிலங்களுக்கு இடையிலான பல புதிய கவுன்சில்கள், மத்திய அரசால் உருவாக்கப்பட்டு, அனைத்து மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து, மாநிலங்களுக்கான உரிமைகளைப் பேணுவதிலும், மாநிலங்களுக்கான பங்களிப்பை உறுதி செய்வதிலும் மத்திய அரசு கூடுதல் கவனத்தை காட்டி வருகிறது. மிகச்சிறந்த கூட்டாட்சி தத்துவத்திற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. ஆனால் மத்திய அரசு அழைப்பு விடுக்கும் மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டங்களை தவறாமல் புறக்கணிக்கும் தமிழக முதலமைச்சரும் திமுக அமைச்சர்களும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு வகுப்பு எடுப்பது, வேடிக்கையாக இருக்கிறது.

Tn bjp president annamalai statement about mk stalin govt and central govt relationship issue

தமிழக அரசு கடந்த ஓராண்டில் புறக்கணித்த மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டங்களின் பட்டியலை தங்கள் மேலான பார்வைக்காக வைக்கிறோம். மே 17, 2021 மனிதவள மேம்பாட்டு அமைச்சரால் கூட்டப்பட்ட, கோவிட்-19, மற்றும் ஆன்லைன் கல்வி மற்றும் NEP இன் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க அனைத்து மாநிலங்களின் கல்விச் செயலர்களின் கூட்டம்; செப்டம்பர் 17, 2021 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஏப்ரல் 27, 2022 கோவிட்-19 பற்றி விவாதிக்க அனைத்து முதல்வர்கள் ஆன்லைன் கூட்டம், ஏப்ரல் 30, 2022 அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதியரசர்கள் பங்கேற்ற 39வது கூட்டு மாநாடு - இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டனர்.

ஜூன் 1, 2022 குஜராத்தில் NEP 2020 பற்றி விவாதிக்க அமைச்சர்களுக்கான மாநாடு. மத்திய அரசால் கூட்டப்பட்ட மேற்படி கூட்டங்களை எல்லாம் நீங்களும், உங்கள் அமைச்சர்களும் அல்லது சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களும் அற்பமான காரணங்களைச் சொல்லி தவிர்த்து விட்டீர்கள். அப்போதே இது நம் மாநிலத்திற்கு இழைக்கப்படும் துரோகம். நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டை என்பதை அறிவுறுத்தி இருந்தோம். அடுத்தவர்களுக்கு தாங்கள் ஆர்வத்துடன் சொல்லும் அறிவுரைகளை, அக்கறையுடன் நீங்களும் கடைபிடிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். 

ஆகவே மத்திய அரசு இனி அழைப்பு விடுக்கும் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டங்களை தவிர்க்க புதிய காரணங்களை கண்டுபிடிக்காமல், தவறாமல் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒரு வேண்டுகோள் தமிழக முதலமைச்சர் இனி கடிதம் எழுதுவதற்கு முன்னால் அதில் எழுதப்படும் பொருள் குறித்து, ஒருசில நிமிடமாவது செலவிட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். தங்களைச் சுற்றியிருக்கும் ஒருசில அமைச்சர்கள், சமூக ஊடகத்தில் பரபரப்புக்காக அறிவிக்க மட்டும் இதை பயன்படுத்துகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : AIADMK : அதிமுகவில் திருத்தங்கள் செய்ய கூடாது.. நீதிமன்றத்திற்கு பறந்த மனு.. குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள் !

இதையும் படிங்க : AIADMK : எடப்பாடிக்கு பதவியை விட்டு கொடுங்க ஓபிஎஸ்.. இதான் நியாயம் - ராஜன் செல்லப்பா அதிரடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios