AIADMK : எடப்பாடிக்கு பதவியை விட்டு கொடுங்க ஓபிஎஸ்.. இதான் நியாயம் - ராஜன் செல்லப்பா அதிரடி
AIADMK : எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அம்மாள் கட்சியை பெருந்தன்மையாக ஜெயலலிதாவுக்கு விட்டுக் கொடுத்தது போல திறமையானவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி Vs பன்னீர்செல்வம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்து விவாதிக்க கடந்த 14ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றை தலைமை வேண்டும் என சிலர் கருத்து கூறி சர்ச்சையை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 5வது நாளாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமியியும், ஓ பன்னீர்செல்வம் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக - பரபரப்பு
அதேபோல் மாநில முழுவதும் ஆங்காங்கே ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக தலைமை ஏற்க வருமாறு போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். பன்னீர் செல்வமோ, ஒற்றை தலைமைக்கு எதிராக தொடர்ந்து பேசிவருகிறார். பொதுச்செயலாளர் என்றால் அது ஜெயலலிதா மட்டும் தான் வேறு யாரேனும் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தால், அது ஜெயலலிதாவுக்கான மரியாதை கட்சியில் காலாவதியானதற்கு அர்த்தம் என்று தனது கருத்துக்களை முன்வைத்தார். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க : ADMK : அதிமுக வீழ்ந்தது யாரால் தெரியுமா ? முற்றும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் - இதுதான் காரணமா ?
ராஜன் செல்லப்பா - பேட்டி
இன்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, ‘அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்துள்ளது. பொதுக் குழுவில் இது தொடர்பான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. 90 சதவீதம் மாவட்டச் செயலாளர்கள் ஒற்றைத் தலைமையையே எதிர்பார்க்கின்றனர். 2019 ஆம் ஆண்டே ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சி வர வேண்டும் என்று தான் கூறினேன்.
பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்று அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிகாரப்பூர்வமான கூட்டம் இல்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அம்மாள் கட்சியை பெருந்தன்மையாக ஜெயலலிதாவுக்கு விட்டுக் கொடுத்தது போல திறமையானவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.
கட்சியை காப்பாற்றும் ஒருவருக்காக, மற்றொருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும். போராட்டத்தின் மூலம் கிடைக்கும் தலைவர்களையே அதிமுக தொண்டர்கள் ஏற்பார்கள். எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை சிறப்பாக நடத்தியவருக்கு மற்றவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
இதையும் படிங்க : AIADMK : அதிமுகவில் திருத்தங்கள் செய்ய கூடாது.. நீதிமன்றத்திற்கு பறந்த மனு.. குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள் !