ADMK : அதிமுக வீழ்ந்தது யாரால் தெரியுமா ? முற்றும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் - இதுதான் காரணமா ?
AIADMK : சென்னையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் தற்போது அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்த அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு இந்த கோஷத்தை எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். தேனி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக சென்னையில் எடப்பாடி பழனிசாமி, தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல், ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.அதிமுக தலைமை பதவியை பிடிக்க இரு தரப்பினரும் தங்களது தலைவர்களுக்கு ஆதரவாக பல மாவட்டங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அவருக்கு ஆதரவாக நேற்று மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதாவது, அந்த போஸ்டரில், 'சாதாரண அதிமுக தொண்டன் விருப்பம், ஒற்றை இலக்கு! தி.மு.க.வை வீழ்த்துவது, ஒற்றை தலைமை எடப்பாடி ஐயா, கழகம் வாழ்வது யாரால், கழகம் வீழ்ந்தது எவரால், தொண்டர்களே சிந்தியுங்கள்' என்ற வாசகத்துடன் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் விவகாரம் தற்போது சேலம் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று காலை எடப்பாடி பழனிசாமி சேலம் வந்தார். இதனை அறிந்த அதிமுகவினர் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்தனர்.
இதையும் படிங்க : Agnipath Scheme Protest: அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு மாத ஊதியம் எவ்வளவு?
பின்னர் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அங்கு திரண்டிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள், எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியும், அதிமுக ஒற்றை தலைமையை ஏற்க முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து வரவேற்பு அளித்த கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு கலைந்து செல்லுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மோகன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ, மு.தம்பிதுரை எம்.பி, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் நேற்று மாலை சேலத்தில் தங்கியுள்ள எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். அப்போது, அதிமுகவில் நிலவும் கருத்து மோதல் குறித்தும், ஒற்றை தலைமை விவகாரம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று இரவு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை இல்லை என்று குறிப்பிட்டார். இதனால் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் மீண்டும் பரபரப்பானது. இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு பேட்டி அளித்து முடித்த அடுத்த சில நிமிடங்களில், சேலம் நெடுஞ்சாலை நகரில் இருந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு இரவு 8.40 மணியளவில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, கே.சி.கருப்பணன் ஆகியோர் காரில் வந்தனர். நீண்ட நேரம் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Viral video: பள்ளி குழந்தைகள் வேனை வழிமறித்த யானை.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ
இந்நிலையில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ. சி. சண்முகம் ஆரணியில் வெங்கடாஜலபதி கோயில் கட்டியிருக்கிறார். இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று காலையில் நடந்தது. தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. விழாவுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மணிப்பூர் மாநில ஆளுநர் இல. கணேசன், மத்திய அமைச்சர் முருகன், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து புறப்பட்டு விழாவிற்கு வந்து விட்டார் . மதியத்திற்கு பிறகு பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து புறப்பட்டு விழாவிற்கு செல்ல இருக்கிறார் என்கிறார்கள். இந்த விழாவில் பன்னீர் செல்வமும் பழனிச்சாமியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் தற்போதைய சூழலில் பரபரப்பாக இருக்கும். அதிமுகவை பொருத்தவரைக்கும் இது முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ? அதிமுக வட்டாரங்களில் கேள்வி எழுந்து உள்ளது.
இதையும் படிங்க : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க.!! ஓபிஎஸ் ஆப்சென்ட்..தொடரும் ஒற்றை தலைமை சர்ச்சை !