AIADMK : அதிமுகவில் திருத்தங்கள் செய்ய கூடாது.. நீதிமன்றத்திற்கு பறந்த மனு.. குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள் !
AIADMK : கடந்த சில நாட்களாக அதிமுகவின் ஒன்றை தலைமை விவகாரம் புயலாக கிளம்பியிருக்கிறது.
எடப்பாடி Vs பன்னீர்செல்வம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்து விவாதிக்க கடந்த 14ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றை தலைமை வேண்டும் என சிலர் கருத்து கூறி சர்ச்சையை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 5வது நாளாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமியியும், ஓ பன்னீர்செல்வம் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் மாநில முழுவதும் ஆங்காங்கே ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக தலைமை ஏற்க வருமாறு போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். பன்னீர் செல்வமோ, ஒற்றை தலைமைக்கு எதிராக தொடர்ந்து பேசிவருகிறார். பொதுச்செயலாளர் என்றால் அது ஜெயலலிதா மட்டும் தான் வேறு யாரேனும் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தால், அது ஜெயலலிதாவுக்கான மரியாதை கட்சியில் காலாவதியானதற்கு அர்த்தம் என்று தனது கருத்துக்களை முன்வைத்தார். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனாலும் உட்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.
உயர்நீதிமன்றத்தில் மனு
இந்நிலையில் அதிமுக கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அதிமுக வட்டாரங்களில் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க : Agnipath : அக்னிபத் புரட்சிகர திட்டம்..நிறைய பேர் சதி செய்கிறார்கள், உஷார் ! ஆளுநர் ஆர்.என் ரவி எச்சரிக்கை
அந்த மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
அதிமுக - தடை
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க கோரி கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், கட்சி விதிகள்படி நிர்வாக ரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களான பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றை அதிமுக கட்சி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்த தடை விதிக்கக் கோரப்பட்டுள்ளது.
கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் எனவும், செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்க தடை விதிக்கவும், கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதியதாக கட்சி பதவிகளில் நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த இடைக்கால மனுக்களில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசியல் வட்டாரங்களில் மேலும் சூட்டை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க : ADMK : அதிமுக வீழ்ந்தது யாரால் தெரியுமா ? முற்றும் இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் - இதுதான் காரணமா ?