காலம் மலையேறிப் போச்சு முதல்வரே.. இந்தியாவில் இனி பிரிவினைவாத சிந்தனைக்கு இடமில்லை.. நாராயணன் திருப்பதி..!
ஜனநாயகத்தின் உயிர்நாடியான பாராளுமன்றத்தில் பிரிவினைவாதம் பேசி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயன்ற திமுகவின் முயற்சி நேற்று முறியடிக்கப்பட்டது என்பதை முதல்வர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வளர்ச்சி பாதையில் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் புதிய இந்தியாவில் இனி பிரிவினைவாத சிந்தனைக்கு இடமில்லை என்பதை திமுக உணர வேண்டிய தருணமிது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- பிரிவினைவாத கருத்துக்களை பாராளுமன்றத்தில் பேசிய தன் கட்சியின் உறுப்பினருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது என்கிறார். ஜனநாயகத்தின் உயிர்நாடியான பாராளுமன்றத்தில் பிரிவினைவாதம் பேசி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயன்ற திமுகவின் முயற்சி நேற்று முறியடிக்கப்பட்டது என்பதை முதல்வர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க;- இந்த அமைச்சரை நீக்குங்கள்! இல்லன்னா எதையாவது சொல்லி உங்கள் ஆட்சிக்கே பங்கம் விளைவிப்பார் முதல்வரே! பாஜக.!
இது நாள் வரை மொழி ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்த முயற்சித்து கொண்டிருந்தவர்கள், வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், பாஜகவின் ஆட்சியே தொடரும் என்ற நிலையை உணர்ந்து, பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த காஷ்மீர் அமைதி பாதைக்கு திரும்பியுள்ளதை ஏற்றுக்கொள்ளாமல், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் இன ரீதியிலான பிரிவினைவாதத்தை விதைக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திராவிட நாடு கேட்டுக்கொண்டிருந்த காலம் மலையேறிப் போய் விட்டது என்பதை திமுகவும், முதல்வரும் உணரவேண்டும். இது நரேந்திர மோடியின் தலைமையிலான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் பொலிவான புதிய இந்தியா என்பதையும், இங்கு பிரிவினைவாத போக்குக்கு இடமில்லை என்பதையும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்திய போது ஈ.வெ.ரா தான் அதற்கு காரணம் என்று வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் அவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், அந்த மண்டல் ஆணையத்தை அமைத்ததே எங்கள் வாஜ்பாய் அவர்களும், அத்வானி அவர்களும் அமைச்சர்களாக இருந்த ஜனதா கட்சி ஆட்சியில் தான் என்ற வரலாற்றை மறைத்து விட்டு முதல்வர் பேசுவது கண்டிக்கத்தக்கது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370ஐ அமல்படுத்தக்கூடாது என்று உறுதியாக நின்ற டாக்டர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்துக்கு எதிராக இன்று திமுக உறுப்பினர் பேசுவதும், முதலமைச்சர் ஆதரவளிப்பதும் அம்பேத்கருக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் அல்லவா?
ஈ.வெ.ரா வின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்த சூழலிலும் பயன்படுத்துவோம் என்று முழங்கியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஈ.வெ.ரா அவர்கள், திமுக குறித்தும், அண்ணாதுரை அவர்கள் குறித்தும், கருணாநிதி அவர்கள் குறித்தும், மகாத்மா காந்தி அவர்கள் குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் கூறிய அனைத்து கருத்துக்களையும் பயன்படுத்துவாரா முதல்வர் அவர்கள்? முரசொலியிலும், தன் 'X' வலைதள பக்கத்திலும் ஈ.வெ.ரா வின் திமுக எதிர்ப்பு கருத்துக்களை வெளியிடுவாரா ?
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வளர்ச்சி பாதையில் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் புதிய இந்தியாவில் இனி பிரிவினைவாத சிந்தனைக்கு இடமில்லை என்பதை திமுக உணர வேண்டிய தருணமிது. அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்று சொன்னவர்கள், பாராளுமன்றத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் சிம்மக்குரலில் எழுந்த எதிர்ப்பை மறந்திருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன். பிரிவினைவாத கருத்துக்களை மட்டும் அல்ல சிந்தனையைக் கூட ஏற்காது இந்தியா என்பதை முதல்வர் உணர்ந்து கொண்டு, திமுக உறுப்பினரின் பிரிவினைவாத பேச்சை கண்டிக்காமல், ஈ.வெ.ரா பெயரை நீக்கிவிட்டார்கள் என்று மடைமாற்றி, பிரச்சினையை திசை திருப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.