தேவர் சிலை தங்க கவசம் யாருக்கு..? ஓபிஎஸ்யையும், இபிஎஸ்யையும் கழட்டிவிட்டு புதிய முடிவெடுத்த அறங்காவலர்
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்திற்கான வங்கியின் லாக்கர் சாவி தன்னிடம் உள்ளது என்றும், எனவே ஓ.பன்னீர்செல்வம் வேண்டாம், எடப்பாடி பழனிசாமி வேண்டாம் தானே வங்கிக்கு சென்று தங்கக்கவசத்தை பெற்று தேவர் ஜெயந்தி விழாவில் அணிவிக்க உள்ளதாக அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் தெரிவித்துள்ளார்.
தேவர் ஜெயந்தி விழா
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார். அந்த தங்க கவசம் மதுரை அண்ணநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின் போது வங்கிக்கு நேரில் வந்து கவசத்தை பெற்று முத்துராமலிங்கத் தேவர் குடும்பத்தினர் - நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் பெற்று வங்கியில் ஒப்படைத்து வந்தார். இந்தநிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வங்கி லாக்கரில் இருந்து தங்க கவசத்தை யார் எடுத்து செல்வது என்ற குழப்பமானது நீடித்து வருகிறது.
தங்க கவசம்- யாருக்கு அங்கீகாரம்
ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு தரப்பு வங்கி நிர்வாகத்திடம் தங்களிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர். ஏற்கனவே இதே போன்று 2017 ஆம் ஆண்டு பிரச்சனை காரணமாக வங்கி நிர்வாகவே மாவட்ட நிர்வாகத்திடம் தங்க கவசத்தை ஒப்படைத்தது. அதே போன்று முடிவு எடுக்கப்படுமா என்ற நிலை இருந்து வந்தது. இந்தநிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஓ எஸ் மணியன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட இபிஎஸ் தரப்பு ஆதரவு அமைச்சர்கள் பசும்பொன் தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜனை சந்தித்து கடிதம் அளித்தனர். அதேபோல், ஓபிஎஸ் ஆதரவு மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கடிதம் வழங்கினர்.
தேர்தலில் திமுகவை தோற்கடிக்க திட்டமிட்டோமா..? நடந்தது என்ன..? திருமாவளவன் கூறிய ரகசிய தகவல்
புதிய முடிவு எடுத்த அறங்காவலர்
இந்த நிலையில் தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் அதிமுகவினர் இடையே ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பான பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்திற்கான வங்கியின் லாக்கர் சாவி தன்னிடம் உள்ளது என்றும், எனவே ஓ.பன்னீர்செல்வம் வேண்டாம், எடப்பாடி பழனிசாமி வேண்டாம் தானே வங்கிக்கு சென்று தங்கக்கவசத்தை பெற்று தேவர் ஜெயந்தி விழாவில் அணிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிமுகவில் யாருக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலை தற்போதைக்கு முடிவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்