கோவை அருகே கோவில் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்‌.பி வேலுமணி நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவையை தனது கோட்டை என நிருபித்து காட்டியவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இந்த தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதியையும் கைப்பற்றி சாதனைபடைத்தார். ஆனால் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதால் சற்று வேதனையில் இருந்தார்.

இதனையடுத்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி என அனைத்தையும் அதிமுக இழந்தது.இந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று கோவை மாவட்டத்தை திமுக தன் பக்கம் திருப்பியுள்ளது. இந்தநிலையில் திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எஸ்.பி வேலுமணி கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற பெற்ற வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒயிலாட்ட கலைஞர்கள் நடனமாடும் போது அவர்களுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நடனமாடியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

Scroll to load tweet…

இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. வழக்கமாக கோயில் நிகழ்வுகளில் நடனமாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணி,உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பிறகு தற்போது கணியூர் மாரியம்மன் கோவில் நிகழ்வில் நடனமாடியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிலர் சமூகவலைதளங்களில் பதிவேற்றப்படும் அவரது நடனத்தை கலாய்த்தும் வருகின்றனர்.

Scroll to load tweet…