பாஜகவுக்கு இருக்கும் ஒன்றரையணா ஓட்டுக்கும் உலை வைக்க ஆளுநர் வந்துட்டாரா ? முரசொலி விமர்சனம் !
'தமிழக அரசு ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் பங்கேற்காததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம்' என இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவிக்க, இந்த விவகாரம் சூடுபிடித்தது.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் கொடுத்திருந்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்திருந்தது. முன்னதாக விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு தற்போது வரை ஆளுநர் பதிலளிக்காததால் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதேநேரத்தில் சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் பங்கேற்றன. 'தமிழக அரசு ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் பங்கேற்காததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம்' என இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவிக்க, இந்த விவகாரம் சூடுபிடித்தது. அண்ணாமலையின் கருத்துக்கு விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் 'டீ செலவு மிச்சமா? டீசல் செலவு மிச்சம்' எனப் பதிலளித்திருந்தார்.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து டிவிட்டரில் பதிலளித்திருந்தார். இந்நிலையில் திமுக பத்திரிகையான முரசொலியில் 'அவசியமற்ற அரசியல் செய்கிறார் ஆளுநர்' என விமர்சிக்கப்பட்டு கட்டுரை வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரையில், 'தனக்கு இருக்கும் கடமையைச் செய்யாமல் தமிழக ஆளுநர் அவசியமற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
ஒருவேளை தமிழக பாஜகவின் தலைமைப் பொறுப்பை தானே கவனிக்கலாம் என ஆளுநர் நினைக்கிறாரோ. ஆனால் யாரோ சிலரால் தவறாக ஆளுநர் வழி நடத்தப்படுகிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பாஜகவுக்கு தமிழகத்தில் இருக்கும் ஒன்றரையணா ஓட்டுக்கும் உலை வைக்க ஆளுநர் ரவி முடிவு செய்துவிட்டாரா? தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும். அதைப் புரிந்து, தெரிந்து, தெளிந்து செயல்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.