20 லட்சம் பக்தர்கள்..தயார் நிலையில் இலவச பேருந்துகள்..திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலம் தொடக்கம் !
பஞ்சபூதத் தலங்களில் தேயு தலம் என்றும் நெருப்புத் தலம் என்றும் பயபக்தியுடன் போற்றி வணங்கப்படும் கோயில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். இத்தல இறைவனான சிவபெருமான் மலையாக இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருவதால், 14 கி.மீ சுற்றளவுள்ள அண்ணமலையை நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டுச் செல்வதுண்டு.
அமாவாசை, பௌர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் என்றால் நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் வருவதுண்டு. குறிப்பாக திருக்கார்த்திகை நாளில் மட்டுமே சுமார் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வணங்கிச் செல்வார்கள். அதேபோல் சித்ரா பௌர்ணமி நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் கொரோனோ நோய்த் தொற்றின் தாக்கம் இருந்ததால், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் வழிபாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் முற்றிலும் குறைந்துவிட்டதால், கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வழக்கமான பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்று தொடங்கி நாளை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பக்தர்கள் நலன் கருதி ஆட்டோவுக்கான தனிநபர் கட்டணத்தை நிர்ணயம் செய்து ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மைதானம் வரை; அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அங்காளம்மன் கோவில் வரை மற்றும் திருக்கோவிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரை தனி நபர் ஆட்டோ கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு வருதற்காக மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் கட்டணமில்லா பேருந்துகள் இயக்க முன் வந்துள்ளனர்.
இதற்காக 50 தனியார் பேருந்துகள் 16 தனியார் பள்ளிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பக்தர்கள் கிரிவலப் பாதையில் எந்த இடையூறும் இல்லாமல் சென்றுவர வருவாய்த் துறை, போக்குவரத்து காவல் துறை, போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.