தமிழக அரசின் நடவடிக்கையால் செவிலியர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..! திமுக அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் தீர்மானம்
2400 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு இவர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்து, நிரந்தர தன்மையற்ற தற்காலிக பணியாளர்களாக மாற்றுப் பணியில் பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் செவிலியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
செவிலியர்கள் பணி நீக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (02.01.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ. வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி காத்திருப்பில் இருந்த 2400 செவிலியர்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
இந்நிலையில், எம்.ஆர்.பி தேர்வு எழுதி மதிப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 2400 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு இவர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்து, நிரந்தர தன்மையற்ற தற்காலிக பணியாளர்களாக மாற்றுப் பணியில் பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் செவிலியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காப்பாற்றியதில் செவிலியர்களின் பங்கும் முக்கியமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
பணி நீக்கம்- ரத்து செய்திடுக
எனவே, செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்தி அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், மேலும் அரசு மருத்துவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்த வேண்டிய ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துவதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்