கள்ளக்குறிச்சி போன்ற சம்பவ சூழல் தமிழகத்தில் ஏற்படக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை நிலையை அரசு கண்டறிய வேண்டும். தமிழக காவல் துறையைப் பொறுத்தவரை ஒரு புகழ்பெற்ற காவல் துறை ஆகும். ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காவல் துறை அடைந்திருக்கிற தோல்வி ஓர் இமயமலை அளவில் ஆனது. இதைக் காவல் துறையால கண்டுபிடிக்க முடியாமல் போனது. சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் தொடர்பாக காட்டுத்தீயாக பரவிய போது இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், எதற்கு இந்தச் செய்திகளை வதந்தியாக பரப்புகிறார்கள் என்று காவல் துறையினர் கண்டுபிடித்திருக்க வேண்டும். 

இதையும் படிங்க: வலிமையான தலைவர் சித்தராமையா ஏன் பிரதமராகக் கூடாது.? காங்கிரஸ் கட்சியை ஜெர்க் ஆக்கிய திருமாவளவன்!

வன்முறையாளர்கள் பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுகிற போது காவல் துறை பயந்து ஓடுகிறது. இது போன்ற சூழல் தமிழகத்தில் ஏற்படக் கூடாது. காவல் துறை அதிகாரிகளும் வருவாய்த் துறை அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டார்கள். தமிழக முதல்வர் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும்கூட மாவட்ட நிர்வாகத்தில் இருக்கிறவர்கள் திறமையற்றவர்களாக இருப்பதால் இது போன்ற இடையூறுகள் ஏற்படுகின்றன. ஒரு குழந்தை உயிரிழந்திருக்கிறது என்பதற்காக நாம் வருத்தப்படுகிறோம். இதன் உண்மைத்தன்மையை என்ன என்று அரசும், காவல் துறையும்தான் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. உண்மையைக் கண்டறிவதில் அரசு உறுதியாக இருக்கிறது.

இதையும் படிங்க: “எல்லாமே கட்டுக்கதை..எதுவுமே செல்லாது” பற்ற வைத்த பண்ருட்டி ராமசந்திரன்.. சசிகலா ரிட்டர்ன்ஸ் !

தமிழக முதல்வருக்கு இரண்டு கடமைகள் இருக்கின்றன. ஒன்று குழந்தை மரணத்தை விசாரித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அடுத்தது, வன்முறையாளர்கள் கொள்ளையர்களைக் கண்டுபிடித்து வாழ்க்கையில் இனிமேல் அவர்கள் இதுபோன்று தவறுகள் செய்யாதவாறு அவர்களைத் தண்டிக்க வேண்டும். இந்த இரண்டையும் சமூகத்தின் மேம்பாட்டுக்காக முதல்வர் செய்ய வேண்டும். தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசுவது முதலில் தவறு. ஏனெனில், தமிழக முதல்வரும், தமிழக மக்களும் அதை ஏற்கவில்லை.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மதக்கலவரங்கள் நிகழவில்லை.. துப்பாக்கிச்சூடு இல்லை.. காவல்துறையை பாரட்டிய முதல்வர்