திமுக பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் மதக்கலவரங்களோ, ஜாதி மோதல்களோ, மக்களைப் பீதிக்குள்ளாக்கக்கூடிய குற்ற நிகழ்வுகளோ இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.துப்பாக்கிச் சூடு இல்லை, கள்ளச்சாராயச் சாவுகளும் இல்லை. காவல்நிலைய மரணங்கள் குறைந்துள்ளன என்று பேசினார்.
தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கவுரவக் கொடி வழங்கப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடந்த விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இந்தக் கொடியினை வழங்கினார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” தமிழ்நாடு காவல்துறையின் குறிப்பிட்ட ஒரு சாதனைக்கு கிடைத்த விருது அல்ல, தமிழ்நாடு காவல்துறைக் காவலர்கள் 160 ஆண்டுகள் ஆற்றிய பணிக்குக் கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம் இது என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொடந்து பேசிய அவர், தமிழத காவல் துறையானது தனக்குத் தானே முதுகில் தட்டிக் கொடுத்துக்கொள்ள வேண்டிய சிறப்பு இது. பழம்பெரும் நகரமான இந்த சென்னை மாநகரத்தில் 1856- ஆம் ஆண்டு அன்றைய மதராஸ் மாநகரில்தான் முதன்முதலில் காவல்துறை வரலாறு தொடங்கியது. 1859-ஆம் ஆண்டு மதராஸ் மாகாண காவல்துறைச் சட்டம் இயற்றப்பட்டது. எனவே நமது காவல்துறை என்பது இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு முன்மாதிரியான காவல் துறை என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க:ஹிட்லர் அமைச்சர்கள் போலவே இந்தியாவிலும் பொய் சொல்லும் அமைச்சர்கள்.. சென்னையில் பொளந்துகட்டிய சித்தராமையா!
பொது அமைதியைக் காப்பது - குற்றங்களில் இருந்து மக்களைக் காப்பது - சட்டங்களைக் காப்பது - பொது மக்களைக் காப்பது, ஒட்டுமொத்தமாகச் சொன்னால் மக்களைக் காப்பது! இதுதான் காவல்துறையின் முழு முதல் பணி என்று முதலமைச்சர் கூறினார். மேலும் பெண்களுக்குக் காவல்துறையில் அதிகாரம் அளித்ததில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கைரேகைப் பிரிவு,
மோப்ப நாய் பிரிவு, புகைப்படப் பிரிவு, கணினித் தொழில்நுட்பப் பிரிவு, கடலோரப் பாதுகாப்புப் பிரிவு, மகளிர் கமாண்டோ பிரிவு எனப் பல்வேறு பிரிவுகள், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக மட்டுமல்ல, முன்னணியிலும் நமது தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது என்று தெரிவித்தார்.
கடந்த ஒராண்டு காலமாக காவல்துறையின் செயல்பாடு முன்பைவிட மிக அதிகளவில் பாராட்டும்படியாக உள்ளது. மதக்கலவரங்களோ, ஜாதி மோதல்களோ, மக்களைப் பீதிக்குள்ளாக்கக்கூடிய குற்ற நிகழ்வுகளோ இல்லை. தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் அமைதி நிலவுகிறது. துப்பாக்கிச் சூடு இல்லை, கள்ளச்சாராயச் சாவுகளும் இல்லை. காவல்நிலைய மரணங்கள் குறைந்துள்ளன என்று பேசினார். காவல் நிலைய மரணம் 2018-ஆம் ஆண்டு 17 மரணங்கள் என்று பதிவானது, 2021-ஆம் ஆண்டு 4 மரணங்களாக குறைந்துள்ளது.
மேலும் படிக்க:அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் - இபிஎஸ் அழைப்பு.. செம ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்!
குறைந்துள்ளது என்றுதான் சொன்னேனே தவிர, முற்றிலும் இல்லை என்று நான் சொல்லவில்லை. காவல் நிலைய மரணங்களே இல்லை என்று சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
