பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..! டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்ட தமிழக ஆளுநர்
தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக ஆளுநர் இன்று மாலை டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் குண்டு வீச்சு
நாடுமுழுவதும் தேசிய புலனாய்வு பிரிவினர் பிஎப்ஐ அமைப்பினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் அடிப்படையில் நாடு முழுவதும் 46 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் தமிழகத்தில் இருந்து 11 பேரையும் கைது செய்யப்பட்டிருந்தினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் அந்த அமைப்பிற்கு ஆதரவாக பல்வேறு பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கோவை, நெல்லை, மதுரை என பல்வேறு இடங்களில் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஆளுநர் டெல்லி பயணம்
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த சம்பவம் தொடர்பாக அமித்ஷாவிடம் புகார் தெரிவித்திருந்தார். மேலும் தமிழக முதலமைச்சரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்று கூறியிருந்தார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களின் பட்டியலையும் அனுப்பி வைத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி செல்லும் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக ஆளுநர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது பதற்றமான நிலை நீடிக்கும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்