திமுக சேலம் வேட்பாளர் செல்வகணபதி போட்டியிடுவதில் சிக்கல்..! வேட்புமனுவை நிறுத்தி வைத்த தேர்தல் அதிகாரி
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக சேலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வகணபதிக்கு இரண்டு இடங்களில் வாக்காளர் அட்டை இருப்பதாக தெரிவித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு பரிசீலனை- செல்வகணபதிக்கு எதிர்ப்பு
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளது..இந்தநிலையில், நேற்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சேலம் தொகுதியில் அதிமுக சார்பாக விக்னேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போல திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி போட்டியிடவுள்ளார். இந்தநிலையில் இந்த இரண்டு பேரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில்,
செல்வகணபதி வேட்பு மனு மீது புகார்
சேலம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியமான டாக்டர்.பிருந்தாதேவி மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் பாட்டீல் தலைமையில் பரிசீலனை நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்த 39 வேட்பாளர்களின் வேட்பு மனுவை பரிசீலனை செய்தனர். அப்போது திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே செல்வகணபதி வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி, தனது வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் சுடுகாட்டு கூரை ஊழல் தொடர்பான வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்டதை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மற்றும் கலர் டிவி ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்டதை அவர் குறிப்பிடாமல் மறைத்துள்ளார் என புகார் தெரிவிக்கப்பட்டது.
செல்வகணபதி வேட்பு மனு நிறுத்திவைப்பு
இதனையடுத்து செல்வகணபதியின் வேட்புமனுவை பரிசீலனை செய்வதை தேர்தல் அதிகாரி நிறுத்திவைத்துள்ளார். சேலம் மேற்கு மற்றும், வடக்கு இரு இடங்களில் வாக்களர் பட்டியலில் பெயர் இருப்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வகணபதிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மற்ற வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்