வட சென்னை வேட்புமனுக்கள் பரிசீலனையில் குழப்பம்... அதிமுக, திமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிறுத்தி வைப்பு
வடசென்னையில் வேட்புமனு தாக்கலின் போது நடைபெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு தரப்பும் வேட்புமனுவை பரிசீலனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு பேரின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக- அதிமுக மோதல்
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது வட சென்னையில் போட்டியிடவுள்ள அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வட சென்னை தொகுதியில் அதிமுக சார்பாக ராயபுரம் மனோவும், திமுக சார்பாக கலாநிதி வீராசாமியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வட சென்னை தொகுதியில், யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக – அதிமுகவினர் இடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அமைச்சர் சேகர் பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மாறிமாறி தேர்தல் அலுவலரிடம் முறையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேட்புமனு பரிசீலனை
இதனையடுத்து டோக்கன் வாங்கியதில் திமுக முறைகேடு செய்ததாக அதிமுக குற்றம்சாட்டியது. முறைப்படி டோக்கன் பெற்றுதான் வேட்பு மனுத்தாக்கல் செய்தோம். தோல்வி பயத்தில் அதிமுக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக திமுகவினர் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.
அப்போது திமுகவினர் அதிமுக வேட்பாளர் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், அதிமுகவினர் திமுக வேட்பாளர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இரண்டு தரப்பும் மாறி, மாறி புகார் தெரிவித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டு பேரின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திமுக அதிமுகவினர் இடையே வேட்பு மனு தாக்கல் அன்று வாக்குவாதம் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி பாஜகவினரும் தற்போது அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய தங்களுக்கு தாமதம் ஏற்பட்டதாக தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்
இதையும் படியுங்கள்