Asianet News Tamil

நாசத்தை ஏற்படுத்தும் நச்சுத் திட்டம்..! புதிய கல்விக்கொள்கையை தாறுமாறாக விமர்சித்த தமிழக எம்.எல்.ஏ..!

தங்கள் பெயருக்கு பின்னால் B'SC, B.A என்று பட்டம் சூட்டிக் கொள்ளும் வாய்ப்புகளும் சாமான்யர்களிடமிருந்து பறிக்கப்படுவது நியாயம் தானா? என்பதை சிந்திக்க வேண்டும். கல்வி கற்றலை எளிமைப்படுத்தியதால் தான், மாடு மேய்த்தவரின் மகனும் மகுடம் சூடும் வாய்ப்பு கிடைத்தது. கூலித் தொழிலாளியின்  மகனும் குபேரன் ஆனான். இனி அவை யாவும் கானல் நீராகுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.

thamimun ansari mla criticizes new education policy
Author
Tamil Nadu, First Published Oct 23, 2019, 5:56 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

புதிய கல்விக்கொள்கை மூலம் ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவு சிதையும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நீட் ( NEET) நுழைவுத் தேர்வு மூலம் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சிதறடித்தவர்கள், இப்போது புதிய கல்வி கொள்கை மூலம் ,எளிய மக்களுக்கான  கல்வி வாசல்களை மூடிட திட்டமிடுகிறார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் இனி கலைக் கல்லூரி பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார்.

இது கல்வி வளர்ச்சியில்  நாசத்தை ஏற்படுத்தப் போகும் நச்சுத்  திட்டமாகும். மேலும், இது +2 படிப்பையே அர்த்தமற்றதாக்கும் முயற்சி மட்டுமல்ல... இனி கலை கல்லூரிகளுக்கு கூட கிராமப்புற மாணவர்களையும், எளிய குடும்பத்து வீட்டு மாணவர்களையும் நுழைய விடாமல், அவர்களை கற்காலத்துக்கு அனுப்பி வைக்க போகும் நீண்ட கால சதித் திட்டமாகவே கருத வேண்டியுள்ளது.

நம் நாட்டில் அரசுப் பள்ளிக்கூடங்களுக்கும், தனியார் பள்ளிக்கூடங்களுக்கும் கற்பித்தலில் இடைவெளி இருக்கிறது. நகர்ப்புற பள்ளிக்கூடங்களுக்கும், கிராமப்புற பள்ளிக்கூடங்களுக்கும் அடிப்படை வசதிகளில் ஏற்ற, இறக்கம் இருக்கிறது. வசதியுடையவர்கள் வீட்டுப் பிள்ளைகள் டியூஷன் மூலம் கூடுதல் அறிவு திறனை வளர்த்துக் கொண்டு நுழைவுத் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள். இது கிராமப்புற மற்றும் ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்கு சாத்தியமா? இதை மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும்.

இதையும் படிங்க: 10 பைசா நாணயத்திற்கு வந்தது யோகம்..! அடித்து பிடித்து தேடும் பொதுமக்கள்..

வெவ்வேறு வகையான பின்னணி கொண்ட இந்திய ஒன்றியத்தில், கல்விக்கான் வாய்ப்புகள் சமமற்று இருக்கும் சூழலில் , எல்லோருக்கும் ஒரே வகையான நுழைவுத் தேர்வு என்பது அநீதியான கொள்கையாகும். நுழைவுத் தேர்வு மூலம் கல்வியின் தரம் உயராது என்பதற்கு ' நீட் ' தேர்வு முறைகளும், அதன் முடிவுகளுமே அனுபவ ஆதாரங்களாக இருக்கிறது. இந்நிலையில், இப்போது கலைக்கல்லூரி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்பது அதிர்ச்சியளிக்கிறது.

தங்கள் பெயருக்கு பின்னால் B'SC, B.A என்று பட்டம் சூட்டிக் கொள்ளும் வாய்ப்புகளும் சாமான்யர்களிடமிருந்து பறிக்கப்படுவது நியாயம் தானா? என்பதை சிந்திக்க வேண்டும். கல்வி கற்றலை எளிமைப்படுத்தியதால் தான், மாடு மேய்த்தவரின் மகனும் மகுடம் சூடும் வாய்ப்பு கிடைத்தது. கூலித் தொழிலாளியின்  மகனும் குபேரன் ஆனான். இனி அவை யாவும் கானல் நீராகுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.

எளியவர்கள் கல்வியின் மூலம் அதிகாரத்தை எளிதில் அடையும் அசுர வேகத்தை தடுக்க நினைக்கிறார்கள் என்ற சந்தேகம் வலுக்கிறது. 
எனவே , சமூக நீதிக்கு எதிரான இப்போக்கை  மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், இதை தமிழக அரசும் எதிர்க்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தமிமுன் அன்சாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: 9 மாத கர்ப்பிணியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கொள்ளையர்கள்..! 5 பவுன் நகைக்காக வெறிச்செயல்..!

Follow Us:
Download App:
  • android
  • ios