தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களையும் தவிர்த்து - அங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாம் துணை நிற்போம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற, மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணையும் விழாவுக்கு முன்னிலை வகித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின், ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு என்பது 73 ஆண்டுகாலம். இன்னும் 2 வருடத்தில் 75-ஆம் ஆண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். 

திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் கொட்டுகின்ற மழையில் - வடசென்னைப் பகுதியில் - ராபின்சன் பூங்காவில் – 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது நான் உடனடியாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பவில்லை. அதில் ஈடுபடவும் இல்லை.முதன்முதலில் நாம் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி, தேர்தல் களத்தில் இறங்கிய ஆண்டு 1957-ஆம் ஆண்டு. 1957-ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் இறங்கி, அதன் மூலமாக 15 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக முதன் முதலில் சட்டமன்றத்திற்குள் நுழைந்தோம். அதைத் தொடர்ந்து 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் எதிர்க்கட்சியாக உள்ளே நுழைந்தோம். 

அதற்குப் பின்னால் 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் வகையில் முதன்முதலில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு, 1971-ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். நாம் ஆட்சிக்கு வந்த காரணத்தால்தான் - ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில்தான் - அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் - தமிழ்நாட்டிற்கு ’தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட்டது. 

அந்த தமிழ்நாட்டிற்கு ’தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்ட நேரத்தில் அண்ணா உடல் நலிவுற்று இருக்கிறார். அமெரிக்காவிற்குச் சென்று ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து முடித்துவிட்டு அவர் தாய்நாடு - தமிழகத்திற்கு வந்திருக்கிறார்.அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு ’தமிழ்நாடு’ என்று பெயர் கிடைத்த அந்த வரலாற்றுச் சிறப்புக்குரிய தினத்தை ஒரு விழாவாக கொண்டாடிட வேண்டும் என்ற முடிவெடுத்து தமிழக அரசின் சார்பில் அன்றைக்கு விழா எடுக்கப்பட்டது. 

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த நம்முடை தொப்புள் கொடி உறவுகள் – தமிழர்கள், அந்த ஈழத்தமிழர்களுக்கு பேருதவியாக பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து, இலங்கையில் இருந்து திரும்பிய தமிழ் உறவுகளுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கி இருக்கும் ஆட்சிதான் நம்முடைய கழக ஆட்சி. அவர்களை இனிமேல் அகதிகள் என்று அழைக்கக்கூடாது – அகதிகள் முகாம் என்று அழைக்கக்கூடாது, ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்ற அதற்கு பெயர் சூட்டி, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை செய்வதற்கு, 13 உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவையும் நாம் அமைத்திருக்கிறோம். 

கடந்த நவம்பர் 2-ஆம் தேதி வேலூர் முகாமுக்கு நானே நேரில் சென்று அதை பார்வையிட்டு வந்திருக்கிறேன். இப்போது இலங்கையில் என்ன நிலை என்று உங்களுக்கு தெரியும். ஒரு மோசமான நிலையில் சிக்கி, இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல – அங்கிருக்கும் இலங்கை வாழ் மக்களும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவேதான் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அரிசி அனுப்ப வேண்டும் - அந்த உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும் - அவர்களுக்கு வேண்டிய முடிந்த அளவிற்கு நம்மாலான சலுகைகளை - உதவிகளை செய்யவேண்டும் என முடிவெடுத்து நான் நேரடியாக டெல்லிக்கு சென்றிருந்தபோது மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்தித்து சொல்லியிருக்கிறேன். 

அதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை சந்தித்தபோதும் சொன்னேன். உள்துறை அமைச்சரை சந்தித்தபோதும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அதற்குப்பிறகு, நம்முடைய அரசின் சார்பில் தொடர்ந்து கடிதங்கள் எழுதி இருக்கிறோம். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிப் பாகுபாடு இல்லாமல் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரப்போகிறோம், நீங்கள் அதை ஆதரிக்க வேண்டும் என்று, அத்தனை கட்சிகளும் - எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. உட்பட எல்லாக் கட்சிகளும் - ஏன் பாஜக. உட்பட நாம் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து, தீர்மானத்தை ஏகமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறோம். 

ஒன்றிய அரசின் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். நிறைவேற்றியவுடன், நேற்று மாலையில் நமக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. தாராளமாக அனுப்புங்கள். நாங்கள் உதவி செய்ய காத்திருக்கிறோம். எங்கள் மூலமாக அனுப்பி வைக்கிறோம். ஒன்றிய அரசுக்கு அனுப்பி வையுங்கள் என்று அங்கிருந்து செய்தி வந்திருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களையும் தவிர்த்து - அங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாம் துணை நிற்போம் என்று அந்த இந்நிலையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

இதையும் படிங்க : யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைக்குறது.. 1,500 கோடி கமிஷன் போகுது.! பகீர் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி