Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் துருப்பிடித்துப் போன யுக்தியை கையிலெடுத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின்! இறங்கி அடிக்கும் அண்ணாமலை.!

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.523 கோடி மட்டுமே. எப்போதுமே, இழப்பீடு மதிப்பை அதிகப்படுத்திக் கூறுவதே தமிழக அரசின் வழக்கமாக இருக்கிறது.

tamilnadu bjp leader Annamalai slams dmk government tvk
Author
First Published Dec 23, 2023, 1:28 PM IST

ஆட்சியில் இருப்பது திமுகவா அல்லது வானிலை ஆராய்ச்சி மையமா? கனமழை பெய்யும் என்று தெரிந்ததும், தென்மாவட்டங்களில் திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை பொதுமக்களுக்குக் கூறத் தயாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நிர்வாகத் தோல்வியை மறைக்க, காலங்காலமாய் திமுக பயன்படுத்தும், மத்திய அரசின் மீது பழிபோடும் துருப்பிடித்துப் போன யுக்தியை, மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால், இந்த முறை ஏமாற மக்கள் தயாராக இல்லை. சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரூபாய் 4,000 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொண்டு வந்ததாகக் கூறி வந்த திமுக, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு அமைச்சர், 70% பணிகள் நிறைவடைந்து விட்டன, 80% பணிகள் நிறைவடைந்து விட்டன என்று ஒவ்வொரு முறையும் கதை சொல்லி, இறுதியாக 98% பணிகள் நிறைவடைந்து விட்டன என்று பொதுமக்களை நம்ப வைத்திருந்தார்கள்.

இதையும் படிங்க;- தேசிய பேரிடர் விவகாரம்: காங்கிரஸை வைத்து திமுகவை தாக்கிய நிர்மலா சீதாராமன்!

மிக்ஜம் புயல் பாதிப்பில் சென்னை மிதந்தபோது, பொதுமக்களின் ஒரே கேள்வி, அந்த 4,000 கோடி என்ன ஆனது என்பதாகத் தான் இருந்தது. 4,000 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்ததால்தான் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறிவந்த முதலமைச்சர் வேறு வழியின்றி, அமைச்சர் கே.என். நேருவை
அனுப்பி, இதுவரை, ரூபாய் 2,191 கோடி மதிப்பில்தான் பணிகள் முடிவடைந்திருக்கின்றன. மொத்த பணிகளின் மதிப்பு ரூபாய் 5,166 கோடி என்று சமாளிக்க முயன்றார். நடைபெறாத பணிகளை, முழுவதும் முடித்து விட்டதாகக் கூறி, சென்னை மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்ததற்கு திமுக அரசே முழு பொறுப்பு.

அதுமட்டுமின்றி, மீதமிருக்கும் சுமார் 3,000 கோடி எங்கே என்பதை முதலமைச்சர் முதலில் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆராய்ச்சி மையம் ஐந்து நாட்களுக்கு முன்பாக இருந்து ஒவ்வொரு நாளும் தெரிவித்தும், எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்காமல் புறக்கணித்துவிட்டு, மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல், வானிலை மையத்தின் மீது குற்றம் சொல்கிறார் முதலமைச்சர்.

ஆட்சியில் இருப்பது திமுகவா அல்லது வானிலை ஆராய்ச்சி மையமா? கனமழை பெய்யும் என்று தெரிந்ததும், தென்மாவட்டங்களில் திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை பொதுமக்களுக்குக் கூறத் தயாரா? கனமழையாலும், வெள்ளத்தாலும் தென்மாவட்ட மக்கள் தத்தளித்துக்
கொண்டிருந்தபோது, 'இந்தி' கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் டெல்லி சென்றதும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார் என்பதே தெரியாமல், அவரை மீட்புப் பணிகளில் ஈடுபட நியமித்ததும், அவரை வெள்ளத்தில் இருந்து மீட்கவே மூன்று நாட்கள் ஆனதும் தான் திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பது மக்களுக்குத் தெரியாதா? 

இந்த ஆண்டு தொடக்கத்தில், கடந்த ஆண்டு மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிவாரண நிதி கையிருப்பு ரூபாய் 813 கோடி, இந்த ஆண்டுக்கான முதல் தவணை ரூபாய் 450 கோடி என்று ஏற்கனவே தமிழக அரசிடம் ரூபாய் 1,263 கோடி கையிருப்பு இருக்கிறது. அதற்கு மேல், இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணை ரூபாய் 450 கோடியையும், மிக்ஜம் புயல் தாக்கிய அடுத்த தினமே மத்திய அரசு வழங்கியது. இழப்பீடு குறித்த ஆய்வுப் பணிகளுக்காக, மத்தியக் குழுவினரும் அடுத்த தினமே தமிழகம் வந்தடைந்தனர். இதில் எங்கே தாமதம் என்று முதலமைச்சர் கூறுகிறார்?

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பேரிடர் இழப்பீடு நிவாரண நிதி என்பது, மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து, அதன் பின்னரே விடுவிக்கப்படும் என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரியாதா? கையிருப்பில் இருக்கும் நிதியில் என்ன நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்? பொதுமக்கள் கோபத்திலிருந்து திமுக அரசின் தவறுகளை மறைத்துத் தப்பித்துக் கொள்ள, மத்திய அரசின் மீது பழி போட்டு ஆடும் நாடகம், இன்னும் எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று முதலமைச்சர் நினைத்துக் கொண்டிருக்கிறார்? கடந்த 2008 ஆம் ஆண்டு, நிஷா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணிதான் மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு இழப்பீடாகக் கோரியது ரூ.3,789 கோடி.

ஆனால் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.523 கோடி மட்டுமே. எப்போதுமே, இழப்பீடு மதிப்பை அதிகப்படுத்திக் கூறுவதே தமிழக அரசின் வழக்கமாக இருக்கிறது. ஆனால் மத்திய அரசுகள், அந்தந்த காலகட்டத்திற்கான பேரிடர் இழப்பீடு நெறிமுறைகளைப் பின்பற்றியே இழப்பீடு வழங்கியுள்ளன. இதை அரசியல் ஆக்குவது தவறு. திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில், வெகு காலதாமதமாகவே மத்தியக் குழு, பேரிடர் ஆய்வுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது அடுத்த தினமே மத்தியக் குழுவினர் களத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். வெகுவிரைவில், இழப்பீடு நிதியும் பேரிடர் இழப்பீடு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க;-  எனக்கு பாடம் எடுக்காதீங்க.. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்

தங்கள் நிர்வாகத் தோல்வியால் பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கிவிட்டு, மத்திய அரசின் மீது பழிபோடும் போக்கை திமுக இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் மடைமாற்றும் போக்கு எல்லா முறையும் வெற்றியடையாது. என்பதையும், பொதுமக்களுக்கு உண்மை தெரியவரும்போது, அவர்கள் கோபத்தின் விளைவுகளைத், திமுகவால் தாங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios