தேசிய பேரிடர் விவகாரம்: காங்கிரஸை வைத்து திமுகவை தாக்கிய நிர்மலா சீதாராமன்!
தமிழ்நாட்டு கனமழையை தேசிய பேரிடராக அறிவிக்கும் விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்
மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மட்டும் சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் வழங்கிடவும், தென் மாவட்டங்களுக்கு மட்டும் 2000 கோடி ரூபாயை முதல் கட்டமாக வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு, நிவாரண பணிகளில் மத்திய அரசின் பணிகள், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை உள்ளிட்டவை குறித்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என திட்டவட்டமாக தெரிவித்தார். “தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது. தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை. தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது.” என அவர் தெரிவித்தார்.
“உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டபோதும் கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. தமிழக மழை வெள்ளத்தை, மாநில பேரிடர் என மாநில அரசு அறிவிக்க நினைத்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும். அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு அதிகாரிகள் செய்வர்.” எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தேசிய பேரிடராக அறிவிக்கும் விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலையும், அதற்கு பின்னர் பாஜக ஆட்சி காலத்தில் அளிக்கப்பட்ட அதே பதிலையும் பகிர்ந்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எந்த ஒரு மாநிலத்திலும், எந்த நேரத்திலும் எந்த ஒரு பேரிடரையும், இந்தியாவின் எந்தவொரு அரசாங்கமும் தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை இல்லை. தமிழ்நாட்டின் மீது அதிக ஆர்வம் இருப்பதால், 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியின்போது கூட அது தேசிய பேரிடராக அறிவிக்கப்படவில்லை. அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் அப்போதும் திமுக கூட்டணியில் இருந்தது. அந்த சமயத்தில் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்தார். அதில், வழிகாட்டுதல்களில் இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க எந்த விதியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, 2016ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் ஒரு கேள்வி தேசிய பேரிடராக அறிவிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. அப்போதும், இதே பதில் அளிக்கப்பட்டது.” என பதிவிட்டுள்ளார்.
ஆணவ மொழியில் பேசி தமிழக மக்களை அவமதித்த நிர்மலா சீதாராமன்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளாசல்!
முன்னதாக, நிர்மலா சீதாராமன் தனக்கே உரிய ஆணவ, எரிச்சல் மொழியில் பேசி தமிழக மக்களை அவமதித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். “ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக (Calamity of severe nature) அறிவிக்க வேண்டும் என்பதும், 21 ஆயிரம் கோடியை நிவாரணமாகத் தர வேண்டும் என்பதும் ஆகும். இந்த இரண்டும் கிடையாது என்பதைத் தான் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார். திமுக அரசையும், முதலமைச்சர் அவர்களையும் அவமானப்படுத்துவதாக நினைத்து, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.” என தங்கம் தென்னரசு சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.