கலைஞரின் எழுத்துகளை படித்தால் மட்டும் தான் எதிர்கால தமிழ் சமுதாயம் முன்னேறும் - ஆ.ராசா பேச்சு
கலைஞரின் எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் சமூகத்திற்காக எழுதப்பட்டவை. அவற்றை படித்தால் மட்டும் தான் எதிர்கால தமிழ் சமுதாயம் முன்னேறும் என்று திருநெல்வேலியில் எம்.பி.ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் மற்றும் மாணவ, மாணவியர் உரையாடல் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், கலைஞர் நூற்றாண்டு விழா கட்சி சார்பிலும், ஆட்சி நிர்வாகத்தின் சார்பிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கலைஞரின் ஆட்சி கால சாதனைகள் என்ன என்பதை அனைவரும் அறிவீர்கள். திருக்குவளையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். எந்தவித பின்புலமும் இல்லாமல் தமிழை நேசித்து, தமிழுக்காக களப் பணியில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராக இருந்து, அரசியல் கட்சியின் தலைவராக 50 ஆண்டுகாலம் பயணித்து இந்திய அரசியலில் கால்பதித்தவர். ஏன் உலக அரசியலில் தமிழ் மொழியை செம்மொழியாக்கிய பெருமைக்குரியவர் கலைஞர்.
எனது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பம். ஆனால் நான் பள்ளிப் பருவத்திலேயே பெரியாரால், கலைஞரால் கவரப்பட்டேன். அதன் பின்பு எனது வாக்கும், போக்கும் மாறத் தொடங்கியது. 5000 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்வி அவசியம் என இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் இந்த இலக்கியங்கள் காணாமல் போனது. இதனை கண்டுபிடித்துக் கொடுத்தது திராவிட இயக்கம்.
திரவிட இயக்கத்தில் தந்தை பெரியார், அண்ணா ஆகியோரின் பணிகளை முழுமையாக்கியது கலைஞரின் இலக்கியம் என்பதை நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். பெரியார், அண்ணா இவர்களை தத்துவத் தலைவனாக ஏற்றுக்கொண்ட கலைஞர் அவர்கள்தான் தமிழ்நாட்டில் நல்லாட்சி தந்ததோடு சமூக நல்லிணக்கம் வரவேண்டும் என பாடுபட்டவர்.
தமிழகத்தில் மதுவிலக்கு துறையை மது விற்பனை துறை என பெயர் மாற்றலாம் - அன்புமணி காட்டம்
மதத்தால், ஜாதியால் இந்த சமூகம் பிளவு படக்கூடாது என உறுதியாக இருந்தவர். கலைஞரின் எல்லா எழுத்துக்களும் இந்த சமூகத்திற்காக எழுதப்பட்டவை. அவற்றை படித்தால் மட்டும்தான் எதிர்கால தமிழ் சமுதாயம் முன்னேறும். கலைஞருக்கு என்று ஒரு இலக்கிய உலகம் இருந்தது. அது அழகியலுக்காக, காதலுக்காக மட்டும் அல்ல. இந்த சமூதாயத்தில் மாற்றம் ஏற்பட்டு தமிழ் சமுதாயம் உயர்ந்து விடாதா என்ற எண்ணத்தில் பிறந்தவை. எனவே மாணவ சமுதாயம் கலைஞரின் இலக்கியங்களை படிக்க வேண்டும் என தெரிவித்தார்.