சட்ட பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறுகிறது தெரியுமா..?அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவு
தமிழக சட்ட பேரவை கூட்டம் வருகிற 19ஆம் தேதிவரை நடைபெற இருப்பதாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஜெயல்லிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி அறிக்கையும் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
19 ஆம் தேதி வரை தமிழக சட்ட பேரவை கூட்டம்
தமிழக சட்டபேரவையின் கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியதும். மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமீது இப்ராகிம், கே கே வீரப்பன், ஏ.எம்.ராஜா, எஸ் புருஷோத்தமன் , திருவேங்கடம், ஜனார்த்தனன், தர்மலிங்கம், எம் ஏ ஹக்கீம், கோவை தங்கம் உள்ளிட்ட 10 மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு மணி துளிகள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து இராமநாதபுரம் இளைய மன்னர் இராஜ.நாகேந்திர குமரன் சேதுபதி ,விடுதலை போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், ஐக்கிய இராஜ்ஜியத்தின் இராணி இரண்டாம் எலிசபெத்.மலேசிய இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சாமிவேலுஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங், முன்னாள் பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் மறைவு குறித்து பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு பேரவையின் இன்றைய அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம் - அறிக்கை விவாதம்
இந்த கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் அப்பாவு அறையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். இதே நேரத்தில் இபிஎஸ் தரப்பினர் சட்ட பேரவை கூட்டத்தை புறக்கணித்திருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, சட்ட பேரவை கூட்டத்தை இரண்டு நாட்கள் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். அதாவது வருகிற 19 ஆம்தேதி வரை சட்ட பேரவை கூட்டம் நடைபெற இருப்பதாக கூறினார். நாளைய தினம் சட்டப்பேரவை கூட்டமானது காலை 10 மணிக்கு தொடங்கும் அப்பொழுது 2022-2023 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவினங்கள் வரவு செலவு திட்டத்தினை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார்.
அதனை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான அறிக்கை சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது. நாளை மறுதினம் கூடுதல் செலவினங்களுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பாக விவாதமும் பதிலுரையும் நடைபெறும். மேலும் சட்ட முன் வடிவும் எடுத்துகொள்ளப்படும் என அப்பாவு கூறினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகம் சாமி அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
அரசியல் தலைவர்கள் மறைவு..! இரங்கல் தெரிவித்து தமிழக சட்டசபை கூட்டம் ஒத்திவைப்பு..