தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக உள்ளவர் விஜய். தமிழ்நாட்டில் பல கோடி ரசிகர்களைக் கொண்டிருக்கும் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு உள்ளது.

திரையில் அரசியல் :

விஜய்யின் படங்களிலும் அரசியல் வசனங்கள் தவறாது இடம் பெறுகின்றன. கத்தி திரைப்படத்தில் இறுதியில் வரும் ப்ரஸ் மீட் காட்சியில் அவர் பேசும் வசனம் இன்றும் கூட அவரது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங்-இல் தான் உள்ளது. அதன் பிறகு கிட்டதட்ட முழுநீள அரசியல் படமாகவே சர்கார் திரைப்படத்தில் அவர் நடித்திருப்பார். இப்படி தனது அரசியல் திட்டம் குறித்துத் தொடர்ந்து மறைமுகமாக வெளிப்படுத்தி வருபவர் விஜய்.

அதற்கேற்ப பல ஆண்டுகளாகவே விஜய்யின் திரைப்படம் வெளியாகும் போது சிக்கல் ஏற்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது. தலைவா திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த Time to lead என்ற ஒற்றை வரிக்காக அவரை படுத்திய பாடு அனைவருக்கும் தெரியும். அப்போது தொடங்கி அனைத்து படங்களின் வெளியீட்டின் போதும் விஜய் எதிர்கொண்ட சிக்கல்கள் பல. 

ஆடியோ லாஞ்ச் அரசியல் :

குறிப்பாக மெர்சல் திரைப்படம் வெளியான சமயத்தில் அவரது பேச்சுக்கு பாஜகவின் ஹெச் ராஜா சர்ச்சைக்குரிய பதிவுகளையும் இணையத்தில் பதிவிட்டிருந்தார். மெர்சல் திரைப்படத்திற்கு பிறகும் அவருக்கு பல்வேறு பிரச்சினைகள் கொடுக்கப்பட்ட போதிலும், அவர் அஞ்சி மன்னிப்பு கேட்டதாகத் தெரியவில்லை. 

மேலும் தனது திரைப்பட வெளியீட்டு விழாக்களிலும் விஜய்யின் பேச்சில் அரசியல் வசனங்கள் தெறிக்கும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக வெற்றி பெற்ற கையோடு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டது விஜய் மக்கள் இயக்கம். ஆனால் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியவில்லை.

நடிகர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ? :

இந்நிலையில், சமீபத்தில் ஹைதராபாத் படப்பிடிப்பிலிருந்த நடிகர் விஜய்யை பிரஷாந்த் கிஷோர் சந்தித்தாகவும், ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், விஜய் தரப்பில் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றும், சந்தித்ததாக வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது.