- Home
- Politics
- தேமுதிக, காங்கிரஸ், அமமுக கட்சிகளை கோட்டை விட்ட தவெக..! கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
தேமுதிக, காங்கிரஸ், அமமுக கட்சிகளை கோட்டை விட்ட தவெக..! கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
2026 தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் தவெக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் தவறான அணுகுமுறையால் தேமுதிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் கைநழுவிச் சென்றதால், தவெக தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பழம் நழுவி பக்கத்து வீட்டு பாலில் விழுந்த காரணம்
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற அதிரடி முழக்கத்துடன் களமிறங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தொடக்கத்தில் ஒரு வலுவான மாற்று சக்தியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக-வை நம்பி வந்த கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக நழுவிச் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கைநழுவிய கட்சிகள்: என்ன நடந்தது?
தவெக-வின் கூட்டணி வியூகங்களை வகுக்கும் பொறுப்பு தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் கையாண்ட விதம் எதிர்மறையான முடிவுகளையே தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேமுதிக: கதவை மூடிய பனையூர்?
விஜய்யை "எங்கள் வீட்டுப் பிள்ளை" என உருகிய பிரேமலதா விஜயகாந்த், தவெக-வுடன் கூட்டணி வைக்கப் பெரிதும் ஆர்வம் காட்டினார். தேமுதிக தரப்பில் இருந்து சுதீஷ் பேச்சுவார்த்தைக்கு முயன்றபோது, "பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம்" என ஆதவ் அர்ஜுனா தரப்பில் இருந்து மெத்தனமான பதிலே வந்துள்ளது. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட திமுக, சத்தமில்லாமல் தேமுதிக-வை தன் பக்கம் இழுத்து ஒரு ராஜ்யசபா இடத்தையும் உறுதி செய்துவிட்டது.
காங்கிரஸ்: டெல்லி வரை சென்றும் தோல்வி!
திமுக கூட்டணியில் இடப்பகிர்வில் அதிருப்தியில் இருந்த காங்கிரஸை இழுக்க தவெக பெரும் முயற்சி எடுத்தது. ராகுல் காந்தியைச் சந்திக்க ஆதவ் அர்ஜுனா ஹைதராபாத் வரை சென்றார். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்களின் அழுத்தம் மற்றும் ராகுல் காந்தியின் பிடிவாதத்தால் அந்தச் சந்திப்பு நிகழவில்லை. இறுதியில் 28 இடங்களைப் பெற்றுக்கொண்டு காங்கிரஸ் திமுக-வுடனேயே ஐக்கியமானது.
அமமுக: தினகரனின் கோபம்
டிடிவி தினகரன் தவெக-வுக்குப் பச்சைக்கொடி காட்டியும், பனையூர் தரப்பில் இருந்து முறையான அழைப்பு போகவில்லை. "ஜெயலலிதா போன்றவர்களையே பார்த்த எனக்கு, நேற்று வந்த ஜூனியர்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை" என தினகரன் கொதிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.
தோல்விக்குக் காரணம் என்ன? - ஆதவ் மீது அதிருப்தி
தவெக-வின் இந்தப் பின்னடைவுக்குப் பின்னால் மூன்று முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
- அதிகாரப் போக்கு: ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே அமைச்சராகிவிட்டது போன்ற தொனியில் கூட்டணிக் கட்சிகளிடம் பேசியது பல சீனியர் தலைவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
- தரவுகளின் மீது அளவுக்கதிகமான நம்பிக்கை: தனது 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பு கொடுத்த புள்ளிவிவரங்களை மட்டுமே நம்பி, கள யதார்த்தத்தை ஆதவ் கவனிக்கத் தவறிவிட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
- முறையான குழு இல்லாமை: ஒரு கட்சியாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரப்பூர்வமான குழுவை நியமிக்காமல், திரைமறைவில் மட்டும் காய் நகர்த்தியது மற்ற கட்சிகளுக்கு நம்பிக்கையைத் தரவில்லை.
அப்செட்டில் விஜய்: அடுத்த கட்டம் என்ன?
தன்னை நம்பி வந்த கட்சிகள் அனைத்தும் திமுக மற்றும் இதர கூட்டணிகளுக்குச் சென்றதைக் கண்டு விஜய் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸை மிக அதிகமாக நம்பியிருந்த அவருக்கு இது ஒரு பெரிய அரசியல் பாடமாக அமைந்துள்ளது. "வாய்ப்புகளை எல்லாம் கோட்டை விட்டுவிட்டீர்களே" என ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் சத்தமாகவே தனது அதிருப்தியைப் பதிவு செய்ததாக பனையூர் வட்டாரங்கள் கசிகின்றன.
தனித்து போட்டியிடும் தவெக
தற்போதுள்ள சூழலில் தவெக தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள சிறிய கட்சிகளையாவது ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்குமா அல்லது 'தனி ஒருவனாக' களம் காணுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

