DMDK: தேமுதிக,அதிமுக கூட்டணியில் இருந்து விலகாமல் இருந்திருந்தால் இபிஎஸ் மீண்டும் முதல்வராகியிருப்பார் -சுதிஷ்
2021ல் ஒரு சிறிய கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம். அப்போது தே.மு.தி.க மட்டும் கூட்டணியில் இருந்திருந்தால் தொடர்ந்து மூன்றாவது முறையாக எடப்பாடியார் முதலமைச்சராக இருந்து இருப்பார் என தே.மு.தி.க மாநில துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கனும்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சையில் அதிமுக. தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய சுதீஷ், ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள், சில விஷயங்கள் ஓப்பனாக பேசியாக வேண்டும் என பேச்சை தொடர்ந்த சுதீஷ்,
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதுதான் உண்மையான கூட்டணி ஆகும் என தெரிவித்தார். 2021ல் ஒரு சிறிய கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம். அப்போது தேமுதிக மட்டும் கூட இருந்திருந்தால் இன்றைக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக எடப்பாடியார் முதலமைச்சராக இருந்திருப்பார் என கூறினார்.
சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் கூட்டணி
எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலு சேர்க்க 2026ஆம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கூட்டணி அமைத்துள்ளது என தெரிவித்தார். இந்தக் கூட்டணி கொள்கை கூட்டணி, வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி அமைத்து மகத்தான வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் வெற்றி நமக்கு உறுதியென கூறினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததை நினைவுகூர்ந்தார். மருத்துவமனையில் சென்று பார்க்க முயற்சி செய்ததாக தெரிவித்தவர், (இந்த பேச்சை கேட்டு முன்னாள் அமைச்சர் காமராஜ் கண்கலங்கினார்) பின்பு உடல் நலம் பெற்று வீடு திரும்பிய தகவல் கேள்விப்பட்டு கேப்டன் விஜயகாந்த் மிகுந்த சந்தோஷம் அடைந்தார் என சுதிஷ் கூறினார்.
இதையும் படியுங்கள்