முதலமைச்சராக எம்ஜிஆர் அழைத்த போதும் அவருடன் செல்ல மறுத்தவர் சண்முகநாதன் என்று நெகிழ்ச்சி சம்பவங்களை கூறி உடன்பிறப்புகள் கலங்கி இருக்கின்றனர்.

சென்னை: முதலமைச்சராக எம்ஜிஆர் அழைத்த போதும் அவருடன் செல்ல மறுத்தவர் சண்முகநாதன் என்று நெகிழ்ச்சி சம்பவங்களை கூறி உடன்பிறப்புகள் கலங்கி இருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்ல… தேசம் முழுமைக்கும் அறிந்த ஒரு தலைவரான கருணாநிதியுடன் பயணித்த அவரது உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். தமது 80வது வயதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் காலமானதை அறிந்து முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட ஒட்டு மொத்த திமுகவினருமே கலங்கியும், அதிர்ந்தும் போயிருக்கின்றனர்.

கருணாநிதியின் கோபாலபுரத்து இல்லம், அறிவாலயம், முரசொலி, கட்சி பொதுக்கூட்டங்கள், அரசியல் மேடை என்று எங்கும் நீக்கமறி நிறைந்திருந்த சண்முகநாதனின் மறைவு உடன்பிறப்புகளை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

கருணாநிதியின் நிழல் என்று வர்ணிக்கும் உ.பி.க்கள், அவரது மரண செய்தி அறிந்து கடந்த கால நினைவுகளை அசை போட ஆரம்பித்துள்ளனர். தொடக்க காலங்களில் சண்முகநாதன் கருணாநிதியிடம் சேர்ந்தது தனிக்கதை. யாருக்கும் தெரியாத கதை… ஒரு மேடையில் கருணாநிதி சொன்ன போதே ஊருக்கே தெரிந்ததது அந்த கதை.

கருணாநிதியிடம் சேரும் முன்பாக தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்து நிருபராக பணியில் இருந்தவர் சண்முகநாதன். எதிர்க்கட்சி தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பொதுக் கூட்டங்களுக்கு சென்று அதை குறிப்பெடுத்து உயரதிகாரிகளுக்கு அனுப்புவார் சண்முகநாதன்.

கருணாநிதியிடம் அவர் உதவியாளராக வந்ததே தனிக்கதை. இதை அவரே சண்முகநாதன் இல்ல திருமண விழாவில் இந்த ருசிகரமான பிளாஷ்பேக்கை பேசியிருக்கிறார்.

அவர் பேசியது இதுதான்: என் பேச்சை அடிப்படையாக கொண்டு ஒருமுறை வழக்கு ஒன்று பதிவானது. வழக்குபோடும் அளவுக்கு பேசியது என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்காக போலீசிடம் எனது பேச்சு நகலை வாங்கினேன். அதை பார்த்து வியந்து போயிருக்கிறேன்.

ஒரு எழுத்து கூட மாறாமல் என் பேச்சு அப்படியே இருந்தது. யார் என் பேச்சை இப்படி அச்சு அசலாக குறிப்பெடுத்தது என்று விசாரித்தேன். அப்போது தான் சண்முகநாதன் பற்றி தெரிந்து கொண்டேன். அமைச்சரான பின்னர் என் பிஏவாக அழைத்துக் கொண்டேன் என்று 1969ம் ஆண்டு நடந்த சம்பவத்தை கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து கூறியிருக்கிறார் கருணாநிதி.

அதன் பிறகே அவர் யார் என்ன என்பதை இன்றைய தலைமுறை அரசியல்வாதிகளுக்கும், அரசியல் பேசுபவர்களுக்கு தெரிய வந்தது. திமுக அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கருணாநிதி எழுதும் கட்டுரைகள் கடிதங்களை தொகுப்பது சண்முநாதனின் முக்கிய பணி. கருணாநிதி எங்கே என்ன பேசினார்? என்ன அறிவிப்பு? என்பதை அவருக்கு முன்னதாகவே நினைவுபடுத்தும் திறன் கொண்டவர் சண்முகநாதன்.

கருணாநிதி கண் அசைவுக்கு என்ன அர்த்தம்? அவர் சிரிக்கிறார் என்றால் எதற்கு சிரிக்கிறார்? என அவரின் தலை முதல் கால் வரை அனைத்தும் அறிந்தவர் சண்முகநாதன் என்று நினைவு கூறுகின்றனர் உடன்பிறப்புகள். 50 ஆண்டுகாலம் கருணாநிதியுடன் இருந்த சண்முகநாதன் 2 முறை கோபித்து கொண்டு வெளியேறி மீண்டும் அவருடனே ஐக்கியமாகி இருக்கிறார்.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தம்மோடு வந்துவிடுமாறு சண்முகநாதனை அழைத்து இருக்கிறார். ஆனால் அதை மறுத்து கருணாநிதியிடமே அவர் மறையும் வரை கூடவே இருந்தவர் சண்முகநாதன். அப்படிப்பட்ட பரிவும், இணைப்பும் இருவரிடமும் இருந்தது. சண்முகநாதனின் மறைவு கோபாலபுரத்தின் முக்கிய தூண் மறைந்துவிட்டது என்பதை உணர்த்துவதாக உள்ளது என்று கண்ணீர் வடிக்கின்றனர் உடன்பிறப்புகள்..!!